Tuesday, May 22, 2012

இலங்கை தமிழர்கள் அனைத்து வசதிகளும் பெற பாடுபடுவோம் : ராஜிவ் நினைவிடத்தில் ஞானதேசிகன் பேச்சு!

Tuesday, May, 22, 2012
ஸ்ரீபெரும்புதூர்::இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தை, பயங்கரவாதிகள் அனுமதித்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த துன்பமும் வந்திருக்காது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், நேற்று அவரது 21வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மலர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தையொட்டி, நேற்று அவரது நினைவிடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, சர்வமத பிரார்த்தனை, இலவச ரத்ததான முகாம், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தொழிலாளர் பிரிவு தலைவர் பிரகாசம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், ஜோதி ஏந்தியபடி வந்தனர். காலை 10 மணிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் தங்கபாலு, மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், திருநாவுக்கரசர், எம்.பி., ஆரூன் மற்றும் பிரமுகர்கள், ராஜிவ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பேசும் போது, "ராஜிவ் நினைவு நாள், இந்தியா முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவர், 18 வயதுடையவர்களும் ஓட்டளிக்க நடவடிக்கை மேற்கொண்டார். உயிருக்கு உயிராக இருந்த, இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டி, இலங்கை - இந்தியா ஒப்பந்தம் கொண்டு வந்தார்.
அதை, புலிபயங்கரவாதிகள் அனுமதித்திருந்தால், எந்த துன்பமும் இலங்கைத் தமிழர்களுக்கு வந்திருக்காது. இந்நன்னாளில், ராஜிவ் கண்ட கனவையும், அவர் விட்டுச் சென்ற தொழில்நுட்பப் பார்வையையும் செயல்படுத்த சபதம் ஏற்போம். இலங்கைத் தமிழர்கள் அனைத்து வசதிகளும் பெற்று, சமூக அந்தஸ்து பெற்று வாழ, நாம் பாடுபடுவோம்' என்றார்.

ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு : முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவு தினத்தை ஒட்டி, சத்தியமூர்த்திபவனில் அவரது உருவப்படத்திற்கு, தமிழக காங்கிரசார் மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில், நேற்று ராஜிவ் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மத்திய இணை அமைச்சர் முனியப்பா, ராஜிவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment