Thursday, May 17, 2012

வியட்நாம் நீதியமைச்சர் – நீதியமைச்சர் ஹக்கீம் சந்திப்பு!

Thursday, May 17, 2012
இலங்கை::யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் நீதித்துறையின் செயல்பாடுகள் தற்பொழுது பரவலாக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வியட்நாம் நீதியமைச்சர் ஹா ஹுங் குலொங் (Ha Hung Culong) இடம் தெரிவித்தார்.
இங்கு நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஏழு பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவுடன் வருகை தந்துள்ள வியட்நாம் நீதியமைச்சர், புதன் கிழமை (16) முற்பகல் கொழும்பு சிணமன் லேக் சைட் ஹோட்டலில் நீதியமைச்சர் ஹக்கீமையும், அவரது அமைச்சின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய போதே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையில் எவ்வாறு நீதித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதில் வியட்நாம் நீதியமைச்சரும் அவரது குழுவினரும் அதிகம் ஆர்வம் செலுத்தினர்.

தாம் தலைமை தாங்கும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தில் வியட்நாம் இடம்பெறாததை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், அதில் அந் நாடு இணைந்து கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதனூடாக இருபெரும் கண்டங்களிலுள்ள நாடுகளுக்கிடையில் நீதித்துறையில் இணைந்து செயலாற்ற அரிய வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நீதித்துறையோடு நேரடியாக தொடர்புபட்ட மத்தியஸ்த சபைகள், கடன் இணக்கச் சபை, சட்ட உதவி ஆணைக்குழு, இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் பற்றியும் பல்வேறு நீதி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்தார்.

அத்துடன் தாம் புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் சட்டங்கள் மற்றும் சட்டத்திருத்தங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டித்தரவல்ல சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் விரைவில் இலங்கையில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதனூடாக வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் இணக்கத் தீர்வை காண்பதற்கு பல்வேறு நாடுகள் முன் வரவுள்ளதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விவசாயத்தையும், கைத்தொழில்களையும் அடிப்படையாக கொண்டு அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையைப் பொறுத்தவரை அவற்றில் முன்னேற்றம் கண்டுள்ள வியட்நாமின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அமைச்சர் ஹக்கீம் கேட்டுக்கொண்டார்.

2010 ஆம் ஆண்டில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் வியட்நாமும் இடம்பெற்றுவிட்டதாக குறிப்பிட்ட அந் நாட்டு நீதியமைச்சர் ஹா ஹுங் குலொங், கைத்தொழில் துறையில் தமது நாடு துரிதமாக முன்னேற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தில் இணைந்து கொள்ளுமாறு அதன் தலைவரான இலங்கை நீதியமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அழைப்பை தமது நாடு சாதகமாக பரிசீலிக்குமென்றும் அவர் சொன்னார்.

நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் இப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment