Thursday, May, 24, 2012புதுக்கோட்டை::புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் உள்பட இதுவரை 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை தொகுதிக்கு வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18ம் தேதி துவங்கியது. 32 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிச் சென்றனர். முதல் நாளே தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்டிஓ முத்துமாரியிடம் மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஐஜேகே வேட்பாளர் சீனிவாசன் நேற்று மனு செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக ஜான் கென்னடி ராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மதுகுடிப்போர் விழிப்புணர்வு புரட்சி இயக்கம் சார்பில் செல்லபாண்டியன், பாரதிய ஜனசேவா கட்சி சார்பில் புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விஜயன் ஆகியோரும், சுயேச்சைகளாக நாகர்கோவிலை சேர்ந்த நாகூர்மீரான் பீர் முகமது, ராஜகோபாலபுரம் செந்தில்குமார், தஞ்சாவூரை சேர்ந்த முத்துக்குமார் என மொத்தம் 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை சுயேச்சை வேட்பாளர் மாத்தூரை சேர்ந்த சத்யமூர்த்தி என்ற மூக்கையா மனு தாக்கல் செய்ய வந்தார். நாளை கடைசி நாள் என்பதால் மேலும் பலர் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 26ம் தேதி நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 28ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்குப்பதிவு ஜூன் 12ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 15ம் தேதியும் நடக்கின்றன.
No comments:
Post a Comment