Saturday, May, 19, 2012கும்மிடிப்பூண்டி::தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் நேற்று மாலை மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். ஊத்துக்கோட்டை அடுத்த ஆட்ரம்பாக்கம் கிராமத்தில் இருளர் வசிக்கும் பகுதியில் எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.6.32 லட்சம் செலவில் 500 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அதை விஜயகாந்த் துவக்கி வைத்தார். அதேபோல் பெரியபாளையம் அருகே உள்ள வண்ணாங்குப்பம் கிராமத்தில் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள கலைக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மங்கலம் ஆரணி ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நேற்றிரவு கும்மிடிப்பூண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், பெண்கள் 7 பேருக்கு தையல் இயந்திரம், தீ விபத்தில் வீடுகளை இழந்த 8 குடும்பத்தினருக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பேசியதாவது: மின் பற்றாக்குறையால் தமிழகம் இருண்டு விட்டது. அதிமுக ஆட்சியில் மக்களின் கல்வி, வாழ்க்கைத்தரம் இன்னும் உயரவில்லை. டாஸ்மாக் கடையில் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி விற்பனையாகி உள்ளது. இதுதான் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கேரளா, கர்நாடகாவுக்கு லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார். கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment