அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதே அவசரமும் அவசியமுமான தேவையாகும்: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
Wednesday,April,18, 2012இலங்கை::மீளக்குடியமர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமான அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதே அவசரமும் அவசியமுமான தேவையாகும். இவ்வாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது.பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு நேற்று மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியது.
இலங்கை அரசு நீதியாக, நேர்மையாகத் தம்முடன் பேச்சு நடத்தவில்லை என்ற விடயத்தை கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தினர்.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோர் பங்குபற்றினர்.
இலங்கை அரசுடன் இடம்பெற்றுவரும் தீர்வுப் பேச்சு உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:
இலங்கை அரசுடனான பேச்சுகள் குறித்து நாம் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு தெளிவுபடுத்தினோம். அத்துடன், இதுவரையில் நடைபெற்று வந்த பேச்சுகள் குறித்தும் விளக்கமளித்தோம்.
இலங்கை அரசு நேர்மையான, நீதியான முறையிலும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை என்ற விடயத்தையும் இந்தியக் குழுவினரிடம் சுட்டிக்காட்டினோம்.
இலங்கை அரசு சரியான முறையானதொரு பேச்சுக்கு வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு பேச்சுக்கு வந்து அதில் இணக்கம் ஏற்பட்டால் தெரிவுக்குழு குறித்து பரிசீலிக்கலாம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் தெரிவித்தோம்.
வடக்கு,கிழக்கு பிரச்சினைகளையும் இந்தியக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். குறிப்பாக, சம்பூர் பிரச்சினை, முல்லைத்தீவில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றம் ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
அதுமாத்திரமின்றி, நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் இந்தியக் குழுவிற்கு நாம் விளக்கமளித்தோம்.
இந்த விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்தியக் குழுவினர் கலந்துரையாடுவர் என நம்புகின்றோம் என்றார் சுரேஷ்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்த வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியவை வருமாறு
போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கை அரசு இன்னும் தீர்வை வழங்குவதற்கு முன்வரவில்லை என தலைவர் சம்பந்தன் இந்தியக் குழுவிடம் எடுத்துரைத்தார்.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள்,காணாமல் போயுள்ளோர் குறித்தும் அவர் இந்திய சர்வக்கட்சி குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார். வீதி அமைத்துக் கொடுத்தல், வீதிகளை புனரமைத்தல், தகடுகளை வழங்கல் போன்ற உதவிகளை இந்தியா எமக்கு வழங்குகின்றது. ஆனால் அரசியல் தீர்வு ஒன்றுதான் எமக்கு முக்கியமானது.
அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நாம் சுட்டிக்காட்டினோம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம், வடக்கு, கிழக்கு இணைப்பு ஆகிய விடயங்கள் குறித்தும் பேசப்பட்டன என்றார்.
No comments:
Post a Comment