Wednesday, April 18, 2012

இலங்கை சென்றுள்ள குழுவில் திமுக, அதிமுக இருந்திருக்கலாம் : மார்க்சிஸ்ட் கருத்து!

Wednesday,April,18, 2012
சென்னை::மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திமுகவும், தமிழக ஆளும்கட்சியான அதிமுகவும் பங்கேற்றிருக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து முழுமையான சுயாட்சி அதிகாரம் வழங்கவேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழ் மக்கள் சமமாக நடத்தப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நிவாரணம் மற்றும் முகாம்களில் உள்ளவர்களை அவர்களது வாழ்விடங்களில் மீள்குடி அமர்த்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கையில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆனபிறகும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எம்பிக்கள் குழுவின் பயணத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. அவர்கள், இலங்கையிலிருந்து திரும்பியதும் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கும் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும்.

No comments:

Post a Comment