Monday, April 16, 2012

உள்நாட்டு பாதுகாப்பு பற்றி விவாதிக்க டெல்லியில் இன்று முதல்-மந்திரிகள் மாநாடு: ஜெயலலிதா கலந்து கொள்கிறார்!

Monday, April 16, 2012
புதுடெல்லி::உள்நாட்டு பாதுகாப்பு பற்றி விவாதிக்க மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் இன்று (திங்கட்கிழமை) கூட்டி உள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கிற இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

ஜெயலலிதாவுடன் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்திய முதல்-மந்திரிகள் நரேந்திரமோடி (குஜராத்), நவீன் பட்நாயக் (ஒடிசா), நிதீஷ்குமார் (பீகார்), சிவராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), ராமன்சிங் (சத்தீஸ்கார்), பிரேம்குமார் துமால் (இமாச்சலப்பிரதேசம்) உள்ளிட்டவர்களும் பங்கேற்பதால் இன்றைய முதல்-மந்திரிகள் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. எதற்காக அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

மம்தா பானர்ஜிக்கு பதிலாக மேற்கு வங்காள நிதித்துறை மந்திரி அமித் மித்ரா கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிற முதல்-மந்திரிகள் மாநாட்டில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடக்கிற முதல்-மந்திரிகள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தொடக்க உரை ஆற்றுகிறார். ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை, வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரம் பற்றி அவர் அறிக்கை அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விளக்கப்படுகிறது. எல்லை தாண்டிய தீவிரவாதம், தீவிரவாதிகள் ஊடுருவல், ஆயுதக்கடத்தல், கள்ள நோட்டுகள் புழக்கம், உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும்.

பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்புக்கள், நக்சலைட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடக்கிற சண்டைகள், பாதுகாப்பு படைகளுக்கு இடையே உளவுத்தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், எல்லை நிர்வாகம், கடலோரப்பாதுகாப்பு, மத்திய-மாநில உறவுகள், போலீஸ் துறை நவீனமயமாக்கல் குறித்த முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் பற்றி தனியாக முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவதால், அது குறித்த விவாதம் இன்றைய மாநாட்டில் இடம் பெறாது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்-மந்திரிகள் மாநாடு இன்று முடிவுற்றதும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள 9 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம் தனியாக நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இன்னும் முடுக்கி விட வேண்டிய செயல்பாடுகள், மத்திய உதவிகள் பற்றி விவாதிக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment