Sunday, April 29, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Sunday, April 29, 2012
சென்னை::இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடு வீதியில் வைத்து தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் பதாகையில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை தேசிய கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment