Thursday, April 19, 2012

இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு வடக்குக அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அவதானித்ததன் பின்னர் நன்றி தெரிவிப்பு!

Thursday, April, 19, 2012
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு வடக்குக அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அவதானித்ததன் பின்னர் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும் அதே நேரம் இந்திய நிவாரணங்களை பகிர்ந்தளிப்பதற்குமான இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள குழு நேற்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே இவ்வாறு நன்றி தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு தனது வடக்கிற்கான விஜயத்தின்போது வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள கதிர்காமம் நிவாரணக் கிராமத்தில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும்விசேட வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் யுத்தம் இடம்பெறற பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் கவனம் செலுத்தியிருந்தது.

இதே சந்தர்ப்பத்தில் மேற்படி குழுவிடம் வடக்கு மக்கள் அங்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நலன்புரித் திட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிவாரண வீட்டுத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் பொது மக்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, அங்கு மேலும் 250 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் 150 பேருக்கும் துவிச்சக்கர வண்டிகளும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மேற்படி பாராளுமன்றக் குழு அன்பளிப்புச் செய்தது.

இது இவ்வாறிருக்க எதிர்காலத்தில் வடக்கின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்திய அரசின் உதவி பெற்றுத் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ..

இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது- சுதர்சன நாச்சியப்பன்!

நாம் இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது என இந்திய பாராளுமன்ற குழுவில் பங்கேற்றுள்ள சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நிலையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் இலங்கை விஜயம் தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அரசில் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பிலும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த அவர் பல கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக சந்தித்து கதைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஒவ்வொருவரும் என்ன சிந்தனையுடன் இருக்கின்றார்கள் எந்த அளவில் திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி பல்வேறு கட்சிகளுடன் பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

சம்பந்தன் ஐயாவுடன் பேசுவதற்கும் அரசாங்கத்தின் நிலை தொடர்பில் பேசுவதற்கும் சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன் நேற்று முன்தினம் இரவு அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாகவும் இந்தியாவை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கும் அவர்களைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக இருந்துள்ளது.

இந்த விஜயத்தின்போது நாம் எது எதைப் பார்க்க வேண்டும் எது எது வேண்டும் என இந்திய தூதுவராலயத்தின் மூலம் கோரினோமோ யார் யாரை சந்திக்க வேண்டும் என வேண்டினோமோ அவை அனைத்தும் எமது பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment