Thursday, April 26, 2012

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான ரேடார் செயற்கை கோள் விண்ணில் பாய்ந்தது : சோதனை முழு வெற்றி; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!

Thursday, April, 26, 2012
சென்னை::முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘ரிசாட்,1 ரேடார் செயற்கைகோள், பிஎஸ்எல்வி,சி19 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.47 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், (இஸ்ரோ) முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக ரேடார் செயற்கைகோளை தயாரித்தது. அதற்கு ‘ரிசாட்,1என்று பெயரிடப்பட்டது. 1,858 கிலோ எடை கொண்ட செயற்கைகோள், பிஎஸ்எல்வி,சி 19 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.47 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செயற்கை கோள் ஏவுவதற்கான 71 மணி நேர கவுன்ட் டவுன் 23ம் தேதி காலை 6.47 மணிக்கு தொடங்கியது. நான்கு நிலைகளை கொண்ட பிஎஸ்எல்வி,சி19 ராக்கெட் மூலம், செயற்கைகோள் பூமியில் இருந்து 480 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளை தயாரிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இந்த செயற்கை கோள் வேளாண்மை, நீர்வள நிர்வாகம் உள்பட பல்வேறு நோக்கங்களுக்கு பயன்பட இருக்கிறது. இரவு பகல் என எப்போதும் எந்த கால நிலையிலும் மேக மூட்டம் இருந்தாலும், பூமியை துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

பனி, மேகமூட்டம் அதிகமுள்ள காலங்களில் தெளிவான படங்களை பெற வேண்டும் என்றால், கனடா உள்பட வெளிநாட்டின் செயற்கை கோளையே இந்தியா நம்பி இருக்க வேண்டி இருந்தது. ரிசாட் 1 செயற்கை கோள் மூலம் அத்தகைய படங்களை பிற நாடுகளின் துணையின்றி நாமே எடுக்க முடியும். செயற்கைகோள் ரூ.378 கோடியிலும், செயற்கை கோளை விண்ணுக்கு எடுத்து செல்லும் ராக்கெட் ரூ.120 கோடியிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.498 கோடி செலவிடப்பட்டுள்ளது. செயற்கைகோளில் சி,பாண்ட் எஸ்.ஏ.ஆர். எனப்படும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனால், படங்கள் அனைத்தும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும். பிஎஸ்எல்வி சி,19 வகை ராக்கெட், எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப்படும் எக்ஸ்.எல் வகையை சேர்ந்தது. இதுபோன்ற ராக்கெட் இஸ்ரோவால் 3வது முறையாக விண்ணில் ஏவப்படுகிறது. மற்ற நாடுகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் மற்றும் ஜி.சாட்,12 ஆகிய செயற்கை கோள்களை அதன் சுற்றுவட்ட பாதையில் செலுத்துவதற்கு இந்த பிஎஸ்எல்வி எக்ஸ்.எல் ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது. இப்போது ரிசாட் 1 செயற்கை கோள் ஏவுவதற்கும் இதுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதும் விஞ்ஞானிகள் அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


பெண் விஞ்ஞானி சாதனை: அரியலூர் மக்கள் உற்சாகம்

ரிசாட்,1 செயற்கைகோள் திட்ட இயக்குராக பொறுப்பு வகிப்பவர் விஞ்ஞானி வளர்மதி. அரியலூரை சேர்ந்தவர். இவரது தந்தை நடராஜன், வேப்பூர் பஞ்சாயத்து யூனியனில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் ராமகீதா. அரியலூர் நிர்மலா பெண்கள் பள்ளியில் படித்த வளர்மதி, பின்னர் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 1981,ல் பி.இ (இசி) முடித்தார். கிண்டியில் எம்.இ. படித்தார். 1985,ல் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் இவருக்கு இஸ்ரோவிலும், டெல்லி டிஆர்டிஓவிலும் வேலை கிடைத்தது. இஸ்ரோ வேலையை தேர்வு செய்து பணியாற்றி வந்தார். வளர்மதியின் கணவர் வாசுதேவன் சிதம்பரத்தை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் விஜயா வங்கி சீனியர் மேலாளராக உள்ளார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும், தீபிகா என்ற மகளும் உள்ளனர். ரிசாட்,1 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினரும் அரியலூர் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஞ்ஞானி வளர்மதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment