Saturday, April, 28, 2012புதுடில்லி::குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு புனேயில் ஒதுக்கப்பட்ட ராணுவ நிலத்தை திரும்ப ஒப்படைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
குடியரசுத் தலைவராக உள்ள பிரதீபா பட்டீல் வரும் ஜூலை மாதம் ஓய்வு பெற உள்ளார். அதன் பின்னர் அவரது சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவின் புனே நகரில் அவர் குடியேறுவதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 2 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் உள்ள ஆங்கிலேயார் ஆட்சி காலத்து மாளிகைகளும் இடிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் விதிகளை மீறி ராணுவ நிலம் பிரதீபா பட்டீலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இருப்பினும் இதில் சர்ச்சை ஏதும் இல்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் மறுப்பும் தெரிவித்தது. தொடர்ந்தும் சர்ச்சை நீடித்து வந்தது.
இந்நிலையில் பிரதீபா பட்டீல், நில ஒதுக்கீட்டை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளளதாக குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவ நில ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டதின் மூலம் போர் விதவைகள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் நலனுக்கு குடியரசுத் தலைவர் எதிரானவர் என்பது போல சிலரால் காட்டப்பட்டு வருவது அவருக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. நமது நாட்டின் எல்லையை காக்கிற வீரம் மிகுந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அவர் எப்போதுமே பெருமிதமாக கருதி வந்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் ஒருங்கிணைந்த நிலைக்காகவும் தங்களுக்கு அன்பானவர்களை இழந்துள்ள போர் விதவைகள் மீதும் அதிகளவில் மதிப்பு கொண்டுள்ளார். எனவே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை போர் விதவைகளுடன் சிலர் தொடர்புபடுத்தியுள்ள நிலையில், இந்த நில ஒதுக்கீட்டை குடியரசுத் தலைவர் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment