Sunday, April 22, 2012புதுதில்லி::இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும்; முக்கிய தமிழ்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை அகற்றப்படவேண்டும் என அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்திய நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியதாக குழுவின் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இலங்கை சென்றிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், பல்பீர் புஞ்ச், ஐக்கிய ஜனதா தள எம்.பி. விஸ்வகுமார் மோகன், காங்கிரஸ் உறுப்பினர் ஜே.டி. சீலம், சமாஜவாதி உறுப்பினர் சைலேந்திர குமார், பிஜு ஜனதா தளம் உறுப்பினர் சித்தார்த் முகோபாத்யாய ஆகியோர் கொழும்பில் இருந்து தில்லி திரும்பினர். அப்போது இலங்கைப் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் சுஷ்மா கூறியது:
அதிகாரப் பகிர்வை பிரிவினை என்று சிங்களர்கள் புரிந்துகொள்ளக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு' என்பதில் உறுதியாக இருப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படும் வேகம் போதாது. தமிழர் பகுதியில் மறுவாழ்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் வசிக்கும் பகுதிகளை இந்திய எம்.பி.க்கள் பார்வையிட்டதால், அந்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எவ்வித கசப்புணர்வும் இருப்பதாக நான் கருதவில்லை. இலங்கைத் தமிழர் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு அவர்கள் சொந்த நாட்டில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அவர்களுக்கான எங்கள் பயணம் ஓயாது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை. தமிழர்களின் பூர்வீக வசிப்பிடங்களில் அடிப்படை வசதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், கைதாகி சிறையில் இருப்பவர்கள் குறித்து உரிய உறவினர்களுக்குத் தகவல் தரவேண்டும் என்ற போர்ப் படிப்பினை நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரையை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சந்தித்தபோது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வகை செய்யும் இலங்கை அரசியலமைப்பின் 13வது பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதைப் பரிசீலிப்பதாக இலங்கை அதிபர் உறுதியளித்தார்...
அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இலங்கை அரசு தீர்வு காண வேண்டும்'' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை அறியவும், இந்திய அரசின் உதவியுடன், தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதற்காகவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 12 எம்.பி.,க்களை கொண்ட குழு, இலங்கையில், ஆறு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
பயணத்தின் கடைசி நாளான நேற்று, சுஷ்மா சுவராஜ் அளித்த பேட்டி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து, தமிழர்களின் நிலை குறித்து பேசினேன். பார்லிமென்ட் தேர்வு கமிட்டி தொடர்பான விஷயத்தில், இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில், முட்டுக் கட்டை நிலவுகிறது. இந்த முட்டுக் கட்டையை அகற்றி, சமரசமான தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அதிபரிடம் விளக்கினேன்.
பரிந்துரைகள்: இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது, இலங்கை போர் குறித்து, நல்லிணக்க ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான பிரச்னைகளுக்குத் தான், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போரின் போது காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விஷயம் குறித்தும் பேசினோம். அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தீர்வு காண வேண்டும் என்றும், இலங்கை அதிபரிடம் எடுத்துக் கூறினேன். இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், ராணுவத்தினரின் நடவடிக்கையை குறைப்பது குறித்தும் பேசப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில், ராணுவத்தினர் தலையிட மாட்டார்கள் என, இலங்கை அதிபர் என்னிடம் உறுதி அளித்தார். இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்துவதற்காக நடக்கும் பணிகளை, ஒரு கிராமத்தில், நானே நேரடியாக பார்த்தேன். பணிகள், மிகவும் நல்ல முறையில் நடக்கின்றன. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
No comments:
Post a Comment