Sunday, April 22, 2012

இலங்கைப் பிரச்சினையும் இந்திய தூதுக்குழு மேற்கொண்ட விஜயமும்!

Sunday, April 22, 2012
இலங்கை::அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறிகிறோம், அதுபோன்று இலங்கை ஆபத்திலே மாட்டிக்கொண்டிருந்த தருணம் அன்பான சிநேகிதனாகக் கருதப்பட்ட இந்தியா உதவுவதற்குப் பதிலாக ஆற்றிலே தள்ளிவிடுவது போன்று தள்ளிவிடப்பட்ட இலங்கையின் முகத்தில் தோன்றிய காயம் ஆறுவதற்கு முன்பதாக நாட்டுக்கு விஜயம் செய்து திரும்பிய இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழுவின் வருகை/ மேற்பார்வைச் சுற்றுலா போன்றதே! ஆற்றில் தள்ளிவிட்டமைக்கு ஒரு வகை ஆறுதலளிக்கும் சுற்றுலா என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

சந்து பொந்துகள் முதல் சர்வதேசம் வரை இழையோடி புரையோடிப் போன இலங்கையின் இனப் பிரச்சினை இலங்கையை ஆட்சிசெய்த இரு பெரிய கட்சிகளின் ஸ்திரமற்ற கொள்கைகளின் பிரதிபலிப்பாக அந்நிய நாடுகள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றுமளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன எனில் அதற்குக் காரணம், இலங்கையின் அசமந்தப்போக்கே. மூன்று தசாப்தங்களை விழுங்கிய இனத் தகராறு தீர்த்து வைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் தோன்றிய ஒவ்வொரு தருணத்திலும் / கடும்போக்குவாதிகளின் பேரினவாதச் சிந்தனைகளுக்கு அரசாங்கங்கள் பலியாகியமை வரலாறாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான அரிய சந்தர்ப்பம் கடந்தகால அரசாங்கங்களுக்குப் போலன்றி சமகால அரசுக்கு கிடைத்துள்ளது. உள்நாட்டில் தயாராகும் தீர்வு என்றாலும் அதனைக் கொண்டு தீர்வு காண ஜனாதிபதி விரும்பிக் கொண்டிருந்தாலும் அவரது சகபாடிகளின் உள்ளத்தில் அப்படியான எண்ணத்துக்குப் பதிலாக புலிகள் தீர்த்துக் கட்டப்பட்ட பின்னர் தீர்வு தொடர்பாக பிரஷ்தாபிப்பதில் பிரயோசனமில்லை என்ற எண்ணமே அலைமோதுகிறது. ஆனால் புலிகளினால் பலத்த அடிவாங்கிய இந்தியாவோ புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் வேறுபடுத்தியே பார்க்கிறது.

புலிகள் கொன்றொழிக்கப்பட்டதை விரும்பும் இந்தியா - வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தேர்தல்கள் நடத்தப்படுவதை மாத்திரமன்றி அரசியலமைப்பின் படியாகவோ அல்லது அதற்குப் புறம்பாகவோ அதிகாரப் பகிர்வையும் வற்புறுத்துகிறது. அதன் ஒரு அங்கமாகவே ஜெனீவாவில் போட்ட வாக்கைக் கருதும் அந்த நாடு இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மதிப்பதாகக் கூறுகிறது. இந்தப் பின்னணிகளில் அமைந்ததாகவே நாடாளுமன்றத் தூதுக் குழுவையும் அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.

தூதுக் குழுக்களை இலங்கைக்கு அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் இந்தியாவிலேயே அபிப்பிராய பேதங்களும் விமர்சனங்களும் நிறையவே காணப்படுகின்றன. ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கின்ற அந்த நாடு எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரின் தலைமையில் நிகழ்வுகளைக் கண்டறியும் குழுவொன்றை அனுப்பியமை பாராட் டுதலுக்குரியது என்றாலும் முழுமைபெற்ற அரசு முறைப் பயணம் என்பதற்கில்லை. அமைச்சர்கள் அடங்கிய அமைச்சர் மட்டக் குழு விஜயம் மேற்கொண்டிருந்திருப்பின் அதில் இருக்கக் கூடிய யதார்த்தம் சம காலத்தில் பயணித்த குழுவுக்கு இருந்திருக்கப் போவதில்லை. அது மாத்திரமன்றி குறைபாடுகளைக் கண்டறிவதற்கான விஜயம் எந்த வகையிலும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய பங்களிப்பையும் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும் எனக் கூறுவதற்கில்லை.

ஏமாற்றம்

இதேவேளை தி. மு. க. அங்கத்தவர்கள் இலங்கைக்கு பயணிப்பர் என்பதை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் - இலங்கையின் கொள்கைகளை விமர்சிப்பதில் தொடரான நட வடிக்கைகளை மேற்கொண்ட கருணாநிதியை மேற்கோள் காட்டி தி. மு. க. வை சிறுமைப்படுத்தினார். இதனை ஒரு கெளரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட கருணாநிதி - இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பாராளுமன்ற தூதுக் குழுவில் தமது கட்சியின் பிரசன்னத்தை தட்டிவிட்டார்.

இப்பேற்பட்ட விஜயங்களால் எதுவும் நிகழ்வதில்லை என்பதை கடந்த கால அனுபவத்தைக் கொண்டு விளக்கினார். புனர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் முன்னெடுப்புகள் போன்றவற்றை மதிப்பிடுவதில் தோல்வியில் முடிவடைந்த சரித்திரங்கள் உண்டு. தி. மு. க. வைச் சேர்ந்த எவரும் இடம்பெறார் என்று கூறிய கருணாநிதியே லோக்சபா எம்.பி. ரி. கே. எஸ். இளங்கோவனை பிரேரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னர் 2010 இல் தி. மு. க. / காங்கிரஸ் எம். பி.க்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கருணாநிதியின் புதல்வியும் ராஜ்ய சபா எம்.பி.யுமான கனிமொழி, ரி. ஆர். பாலு, விடுதலை சிறுத்தைக் கட்சியின் தாபகர் தொல் திருமாவளவன் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். எவ்வாறாயினும் சமகாலத்து விஜயத்தில் இரு பெருங் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெறாமை குறிக்கோளற்ற விஜயம் போன்றமைந்ததாக தெரி விக்கப்படுகிறது.

சந்தேகம் – நிராகரிப்பு

தமிழ் நாட்டின் இரு பெரும் கட்சிகளும், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய பாராளுமன்ற தூதுக் குழுவிலிருந்து விலகி நிற்க குறித்த விஜயம், முக்கியஸ்தர்களற்ற முக்கியத்துவ மில்லாமலாயிற்று. ஆதலால் இது ஒரு நல்லெண்ண வரவு என்ற மனப் பதிவை வழங்கி முக்கியஸ்தர்களுடனான உள்ளக ஈடுபாட்டுக்கு இடமளிக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. தூதுக் குழுவின் விஜயம் பிரஷ்தாபிக்கப்பட்டதிலிருந்து முன்னரும் மேற்கொள்ளப்பட்ட விஜயத்திலிருந்து கற்ற பாடங்கள் ஏளனங்கள் பற்றி சுட்டிக்காட்டிய தமிழ் நாட்டு முக்கியஸ்தர்கள்/ சமகாலத்து விஜயத்தின் மூலமான பிரயோசனம் என்ன என்ற கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

மேலும் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த டி. ராஜா, தொல் திருமாவ ளவன், போன்ற - பாராளுமன்றத் திலும், பொது மேடைகளிலும் இல ங்கைத் தமிழர்களுக்காக குரலெழுப்பும் முக்கியஸ்தர்கள் உள்வாங்கிக் கொள் ளப்படாமை கவலையளிப்பதாக நோக் கர்களும் தூதுக் குழுவில் இடம்பெறு வோருமே கூறினர். இவ்வாறு நடந்துகொண்டமை தூதுக் குழுவில் எவர் இடம்பெற வேண்டும் என்பதை இலங்கையே தீர்மானித்ததோ! என்று ஐமிச்சப்படுவோரும் உள்ளனர். பேரவையில் எதிராக வாக்க ளித்ததற்காக இலங்கையை சாந்தப்படுத்துவ தற்கான ஒரு பயணமாகவே இதனைக் கருதமுடியும் என்று விமர்சனம் செய்வோரும் உள்ளனர். தான் ஏன் உள்ளடக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை மத்திய அரசு கூறவேண்டுமேயொழிய தனக்குத் தெரியாது என்று முக்கியஸ்தரான ராஜா தெரிவித்தார்.

இது இந்திய அரசாங்கத்தின் நல்லெண்ண விஜயம் போன்றுள்ளது. எத்தகைய நோக்கத்தையும் நிறைவேற்றப் போவதில்லை, இந்திய விஜயத்தில் ஈடுபடுவோர் முறையான விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றெல்லாம் கருத்துக்களை முன்வைத்த ராஜா - இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் வேறு எவரையும் விட மாநிலம் கூடுதல் பங்கு கொண்டுள்ளதால் பலத்தையும் செல்வாக்கையும் நோக்காமல், தமிழ் நாடு மாநிலத்தின் சகல கட்சிப் பிரதிநிதிகளையும் உள்வாங்கியிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இந்திய அனுசரணையுடனான திட்டங் களை மேற்பார்வை செய்வதே விஜயத்தின் நோக்கமெனில், ராஜதந்திரிகள் குழு வொன்றினால் அது மேற்கொள்ளப்பட் டிருக்கலாம், அதற்கு பாராளுமன்ற தூதுக் குழு தேவையில்லை. குழுவினர் – மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாகவும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் அர்த்தபுஷ்டியான சம்பாஷனை இலங்கை அரசுடன் இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

எவ்வாறாயினும், இத்தகைய விமர் சனங்களுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சி எம்.பி.யான தூதுக் குழு உறுப்பினர் நாச்சியப்பன் குறித்த விஜயம் இலங்கைத் தமிழர்கள் மீது நம்பிக்கையை உண்டு பண்ணும் வாய்ப்பளிக்கும், இந்தியா என் றும் நெருக்கடியான தருணத்தில் அவர்கள் பக்கமே என்ற தகவலை வழங்கும் சட்டம், ஒழுங்கு தொடர்பான நிலைமைகளை விசாரித்தறிவோம், 13 வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவோம், அதிகாரப் பகிர்வு முறைமையை ஆராய்வோம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு முன்பு விஜயத்தின் மூலமான களநிலவரம் பற்றிய பூரண தெளிவு பெற்றுக்கொள்வோம் என்றெல்லாம் கூறிய அவர், தூதுக் குழுவினருக்கு சுதந்திரமான நகர்வுக்கு வாய்ப்பிருக்காது என்ற விமர்சனத்தை நிராகரித்திருந்தார்.

யதார்த்தம் – பலத்த அடி

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கம்/ இந்தியத் தூதுக் குழுவினரை சுதந்திரமாக செயல்பட விட்டுள்ளமை / மக்களுடன் நேரடியாக கலந்து பேச வாய்ப்பளித்துள்ளமை, அந்த மக்களே தத்தமது குறைபாடுகளைக் கூறுகின்றமை, தங்களை சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதியளியுங்கள் என்று சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூற இடமளித்துள்ளமை, போன்ற விடயங்கள் தமிழ்நாட்டின் பிரதி நிதிகளைத் தவிர்த்துக் கொண்ட இரு பிர தான கட்சிகளுக்கு ஒரு பலத்த அடி என்று கூறலாம். தாங்களும் தங்களது பிரதிநிதிகளை இடம்பெறச் செய்யவில்லையே என்று கட்சித் தலைவர்களும், தங்களுக்கு சந்தர்ப்பம் கிட்டவில்லையே என்று நினைக்கக்கூடிய உறுப்பினர்களும், வாயூறச் செய்கின்றளவுக்கு இலங்கை அரசாங்கத்தால் சுதந்திர நகர்வுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர்களை முறையாகக் கவனிப்பதில்லை, சேமநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளை செய்வதில்லை, தொடர்ந்தும் இம்சைப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அந்த மக்களை கவனிக்கிறது போன்ற குற்றச் சாட்டுகளை இடைவிடாது முன்வைத்துக் கொள்ளக்கூடிய தர்மத்தை தக்கவைத்துக் கொள்வதற்கே கருணாநிதியும் ஜெயலலி தாவும் முனைவதாக முன்னணி இந்திய முக்கியஸ்தர்கள் முனைப்புடன் கூறுகின்றனர்.

அபிப்பிராயம்

கடந்த மாதம் ஜெனீவா மனித உரிமை கள் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்த பிற்பாடு இருபக்க உறவுகளில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பாரிய அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இந்தியத் தூதுக் குழுவினரின் வருகையை கருதலாம் என்று அவதானிகள் கூறினர். இலங்கை சிறுபான்மைத் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்திய - இலங்கை உறவுகள் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளன. ஆரம்பத்தில் நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து விலகிச் செல்லல் என்ற கோட்பாட்டை அடியொற்றியதாகவே இந்தியாவின் ஆதரவு இருந்தது.

சமீப காலங்களில் இரு நாடுகளையும் பிரிக்கும் பாக்கு நீரிணையில் இந்தியா கோரும் ‘வரலாற்று ரீதியான மீன் பிடிக்கும் உரிமைகள்’ தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையே ஒருவகை உராய்வுண்டு. ஆனால் இலங்கை – இந்தியாவின் உரிமைக் கோரிக்கையை ஒருவகை அத்துமீறுகை போன்றே காண்கின்றது. இரு நாடுகளையும் சார்ந்த பல மீனவர்கள் – பாக்கு நீரிணையின் இரு மருங்கிலும் கைதுசெய்யப்படுகின்றனர், சிறையி லடைக்கப்படுகின்றனர். இப்பேற்பட்டதோர் நிலையில் வருகை தரும் இந்தியத் தூதுக் குழுவினர் இதுபற்றியும் பேசலாம் என்ற ஊகமுண்டு.

நோக்கம் – வெட்கம்

இந்தியத் தூதுக் குழுவினரின் இலங்கை விஜயத்தின் அடிப்படை நோக்கத்தை கூர்ந்து கவனிக்கையில், வெட்கித் தலைகுனிய வேண்டிய அம்சமும் பொதிந்தேயுள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரு ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டத்தை இன்னும் முக்வைக்க வில்லை, இழுத்தடிக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றுமே செய் வதில்லை என்ற தோரணையில் கூற முற் படுவது இலங்கைக்கே கவலை தருவதாகும்.

முறையாக முகாமைப்படுத்தப்படாத சில நடவடிக்கைகளால் அல்லலுறும் இலங்கையின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு என்ன குறையிருக்கிறது? அவர்களுக்குரிய தேவை என்ன? அடிப்படைப் பிரச்சினைகள் யாது? முறையாக கவனிக்கப்படுகிறார்களா? அத்தியாவசிய தேவைகளும், சேவைகளும் சென்றடையச் செய்யப்படுகின்றனவா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு வெளிநாட்டிலிருந்து பிரதிநிதிகள் விஜயம் செய்வதாயின், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் இன்னும் மீட்சிபெறவில்லை என்பதே பொருளாகும்.

No comments:

Post a Comment