Sunday, April 22, 2012இலங்கை::இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் உண்மையில் என்ன நடக்கிறது? அம்மக்கள் சிலர் நினைப்பது போல அல்லது சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போன்று உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்களா? என்பதை தமிழக அரசியல் தலைவர்களான முதல்வர் செல்வி ஜெயலலிதா, கலைஞர் மு. கருணாநிதி, வை. கோ, பழ. நெடுமாறன், சீமான், விஜயகாந்த் போன்றோர் நேரடியாக வந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை வந்துள்ள இந்திய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
வெறுமனே கடல் கடந்து கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நின்று உண்மை எதுவென்று நேரில் காணாது கூக்குரலிடுவதால் எவ்விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. முப்பது வருடகால கொடூரமான யுத்தம் நிறைவடைந்து இன்னும் மூன்று வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் அழிவுகள் அனைத்திற்குமே தீர்வு காணப்பட்டுவிட்டதாக பொய்யுரைக்கத் தேவையில்லை. ஆனால் இந்த மூன்று வருட காலத்தில் இலங்கை அரசாங்கம் தனது சக்திக்கும் மீறி வெளிநாட்டு உதவிகளுடன் தமிழருக்கு தேவைக்கு அதிகமாகவே செய்துள்ளதை நேரில் சென்று பார்த்தபோது என்னால் உணர முடிந்தது.
எனவே தமிழக அரசியல் தலைமைகள் உண்மை நிலை புரியாது தமிழக மக்களது உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் செயற்படக்கூடாது. உண்மையில் இலங்கைத் தமிழரில் ஜெயலலிதா, கருணாநிதி, சீமான் போன்றோருக்கு அக்கறை இருப்பின் அவர்கள் இலங்கைக்கு நேரடியாக வந்து நிலைமையை அவதானித்துச் சென்று தமது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் திரு. நாச்சியப்பன் தெரிவித்தார்.
குறைபாடுகள் இருக்கத் தான் செய்கிறது. அவை படிப்படியாக இப்போது தீர்த்து வைக்கப்படுகிறது. பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவம் இருப்பதை மக்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தனர். இப்போது பல மினி இராணுவ முகாம்கள், சந்திக் காவலரண்கள் மூடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் மூலமாக அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக உள்ளது.
இலங்கை அரசாங்கமும் அதே நிலைப் பாட்டிலேயே உள்ளதால் அதில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. இரு தரப்பும் ஒத்துச் சென்றால் மூன்றாம் தரப்பு என்ற பேச்சுக்கு அவசியமேற்படாது எனவும் திரு. நாச்சியப்பன் தெரிவித்தார்.
வவுனியா மெனிக் பாம் அகதி முகாம் மக்களைச் சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தின. குறிப்பாக காணாமற் போனோர் குறித்த கதைகள் மனதை உருக்கின. அந்த மக்களின் அகதிமுகாம் வாழ்விற்கு இந்த வருடம் ஜூன் மாதத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென எம்முடன் அங்கு வந்திருந்த மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்ண உறுதியளித்தார். அது மனநிறை வைத் தந்தது எனவும் நாச்சியப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment