Monday, April 30, 2012

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது:முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது!

Monday, April, 30, 2012
இலங்கை::தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார் .

தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் பிரதமரின் தீர்மானத்தை கண்டிக்கிறோம் - ரவூப் ஹக்கீம்!

தம்புள்ளையில் அமைந்துள்ள முஸ்லீம் பள்ளிவாசல் தொடர்பில் பிரதமர் டி.எம் ஜயரத்ன எடுத்த தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறிப்பிடுகின்றது.

அந்த கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் நேற்று நடைபெற்ற கட்சி அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில், தம்புள்ளை பள்ளி விவகாரம் சம்மந்தமாக அந்தப் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் உடன்பட மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக நேற்று எங்களுடைய அரசியல் உயர்பீடம் கூடித் தீர்மானித்திருக்கின்றோம். இது சம்பந்தமாக நாட்டின் பிரதம மந்திரி தன்னிச்சையாக எந்த அமைச்சரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்த தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறோம். இதுகுறித்து அரசியலில் இருக்கின்ற முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் கூடிப்பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. இன்று காலை நான் ஜனாதிபதியுடன் இது சம்பந்தமாக கதைத்தும் இருக்கின்றேன். என்னுடைய பார்வையில் நிர்வாக ரீதியாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் எல்லாத் தரப்பினரையும் சரியாக விசாரிக்காமல் அவர்களுடைய உடன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல் எடுக்கின்ற எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வாக அமையும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்ற அதேவேளை, இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் ஊடாகவும் பரிகாரங்களைத் தேடமுடியும் என்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment