aturday, April, 21, 2012இலங்கை::காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் வவுனியா மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து மேற்பார்வை உத்தியோகத்தர் டபிள்யு.எஸ்.வீரக்கோன் கெதர தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களே வவுனியா மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் புதுப்பித்து வழங்கப்பட்டு வந்தன. தற்போது வவுனியா மாவட்டச் சாரதிகளின் நன்மை கருதி வவுனியாவை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களின் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களையும் புதுப்பிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் திங்கள் புதன் ஆகிய தினங்களில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தினங்களில் காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட்டுப் பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் இடம் பெறுகின்றன.
சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புவோர் சாரதி அனுமதிப் பத்திரத்தின் மூலப்பிரதி புதிய மருத்துவச் சான்றிதழ் ஆளடையாள அட்டையின் பிரதி பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் என்பவற்றோடு குறிப்பிட்ட தினங்களில் வருகை தந்து புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இதேவேளை வவுனியா மாவட்டத்துக்குத் தமது முகவரியை மாற்றம் செய்து, அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க விரும்புவோர் தமது பகுதி கிராம சேவையாளரின் வதிவிடச் சான்றிதழ் நற்சான்றிதழ் என்பவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் தமது பணியை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
சாரதி அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் புதுப்பிப்பவர்களிடம் இருந்து தண்டமாக வருடாந்தம் 250 ரூபா அறவிடப்படும். உரிய முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு சுமார் 3 மாத காலப்பகுதியில் புதிய சாரதி அனுமதிப் பத்திரம் அனுப்பி வைக்கப்படும் என்று மேற்பார்வை உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment