Monday, April 16, 2012

நிரந்தர தீர்வுக்காக தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும்: சுயநிர்ணய உரிமை, தேசியம் என்று பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை - ஆனந்தசங்கரி!

Monday, April 16, 2012
இலங்கை::தயக்கம் காண்பிக்காமல் பேச்சுவார்த்தைகளில் தமிழ்க் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் அதுவே தீர்வுக்கு அடித்தளமாக அமையும் என்கிறார் ஆனந்தசங்கரி.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியம் என்றும் அதன் மூலமே 30 ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியொன்றில் வலியுறுத்தினார். இது குறித்து தினகரனுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்காக அரசு முன்வைக்கும் யோசனைகள் மீது பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் தயக்கம் காண்பித்து வருவதனால் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க முடியாதிருக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளை யும் தீர்த்து வைக்ககூடியதாக இருக்கவில்லை.

எவ்வாறு இருப்பினும் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதற்கு அமைய தமிழ் கட்சிகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து, மக்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதே புத்திசாலித்தனமானது.

அரசாங்கம் கொடுக்கும் உரிமைகள் போதாது, போதாது என்று அவற்றை தட்டிக்களிப்பதனால் எதுவுமே ஏற்படப்போவதில்லை. இந்தப் பிடிவாதப் போக்கை தமிழ் கட்சிகள் கடைப்பிடித்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படுவது காலதாமதமாகும். சுயநிர்ணய உரிமை, தேசியத்துவம் என்ற அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரயோகிப்பதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுவொன்றை ஏற்படுத்துவது கஷ்டமாக இருக்கும். இவ்விதம் நாம் பேசுவதனால் பிரச்சினையை தீர்ப்பதில் காலதாமதம் ஏற்படும்.

காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகியவற்றையும் தமிழ்த் தலைவர்கள் யதார்த்தபூர்வமாக சிந்தித்தால் அவற்றை குறைந்த மட்டத்திலாவது அமுலாக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆரம்பக்கட்டத்தில் வடபகுதியில் பணிபுரியும் பொலிஸாரை நிராயுதபாணிகளாக சேவையாற்றுவதற்கும் பாரிய குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் பொலிஸாரை வடபகுதியில் அனுமதிக்கலாம் என்றும் காணி விடயத்திலும் நெருக்கடி நிலையை சாதூரியமாக தீர்த்துக் கொள்ளலாம்.

பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ் கட்சிகள் விலகி, பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்த ஆனந்த சங்கரி, தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவரான தன்னை எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைக்கத்தவறியமை குறித்தும் கவலை தெரிவித்தார்.

No comments:

Post a Comment