Monday, April 16, 2012

இலங்கையில் காணாமல் போனதாக அறிவிக்கப்படும் ஆயிரக் கணக்கானோர் போலி அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் - கோத்தாபய ராஜபக்ஷ!

Monday, April 16, 2012
இலங்கை::யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுசரணையுடன் புதிய அடையாள அட்டைகளை பெற்றிருக்கலாம். சமீபத்தில் செய்திகளில் முக்கிய இடம்பெற்றிருந்த குணரட்னம் என்பவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் N 1016123 இலக்கத்தைக் கொண்ட கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொடுத்திருந்தது. இவர் புதிதாக அமைக்கப்பட்ட முன்னிலை சோசலிஷ கட்சியின் தலைவர். இவ்விதம் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வேறொரு பெயரில் இவர் நடமாடியிருக்கிறார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தக்கூற்றை ஊர்ஜிதம் செய்ய முடியுமா? என்று ஒரு ஆங்கில வாரப்பத்திரிகையின் நிருபர் கேட்டபோது பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி, காணாமல் போனதாக கூறப்படும் குணரட்னம் தான் நொயல் முதலிகே என்று ஊர்ஜிதம் செய்ததாக கூறினார். இவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை என்பதையும் ஊர்ஜிதம் செய்தார்.

இத்துடன் குணரட்னம் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதியன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதையும் அவுஸ்திரேலிய தூதரகம் ஊர்ஜிதமும் செய்திருக்கிறது.

அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகள் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கை மக்களை தேடிப்பிடிப்பதற்கு உதவி செய்ய மறுத்தன என்று சுட்டிக்காட்டிய பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆயிரக்கணக்கான இலங்கையர் தற்போது ஐரோப்பிய நாடுகளில் புதிய அடையாள அட்டைகளை பெற்றிருக்கின்றனர் என்றும் கூறினார்.

இதனால் வெளிநாடுகளுக்கு இலங்கை யரை பணத்திற்காக கடத்திச் செல்லும் குற்றம் புரியும் கொள்ளைக் கோஷ்டியினரைக் கூட அரசாங்கத்தினால் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டதென்றும் கூறினார். குணரட்னம் என்பவர் இலங்கையின் கடவுச்சீட்டொன்றையும் வேறு பெயரில் பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

உண்மையில் கூறுவதாயின் குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு அடையாள அட்டைகளையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றிருந்தார் என்று பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

தான் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தற்கொலை குண்டுதாரரிகள் உட்பட பல எல்.ரி.ரி.ஈ.யினர் புதிய அடையாளங்களுடன் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள் என்ற உண்மையாக விளக்கிக்கூறிய பாதுகாப்பு செயலாளர், கதிர்காமத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் ஆடை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் ஒரு எல்.ரி.ரி.ஈ. தற்கொலை குண்டுதாரி ஒருவர் காலியில் ஒரு முஸ்லிமைப் போன்று வேடமணிந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதென்றும் அந்த நபரின் பெற்றோர் தனது மகன் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டி ருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படுகொலை செய்ய வேண்டுமென்ற கட்டளைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன் என்று கூறியிருந்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பின்னர் நொயல் முதலிகே என்ற குணரட்ணம், தன்னை இலங்கையில் கைவிலங்கிட்டு கண்களை கட்டி உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் மூன்று நாட்கள் துன்புறுத்தப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளார் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியின் முன்னிலையில் தான் நொயல் முதலிகேயின் வாக்குமூலத்தை தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் பதிவு செய்யப்பட்டது. அப்போது நொயல் முதலிகே தான் துன்புறுத்தப்பட்ட குற்றச்சாட்டை அங்கு பிரஸ்தாபித்திருக்கலாம் என்று பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நாயல் முதலிகே வீசா காலவதியான பின்னரும் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்த குற்றத்திற்காக அவருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அபராதத் தொகை ஒன்றை விதித்த போதிலும் அவரிடம் பணமில்லை என்ற காரணத்தினால் அந்த தொகையை செலுத்தவில்லை. நாம் அவரை நாட்டை விட்டு வெளியேற்றவில்லை என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அவரே இங்கிருந்து அவுஸ்திரேலியா செல்ல விரும்பினார்.

மேலதிக வீசாவுக்கும் கூடுதலான நாட்கள் இங்கு தங்கியிருந்ததற்கான அபராதத் தொகையை செலுத்தியிருந்தால் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருக்க அனுமதி கிடைத்திருக்கும்.

குணரட்னத்தின் கட்சி இவர் காணாமல் போன விடயத்தை அறிவிப்பதற்கு 12 மணித்தியாலங்கள் எடுத்தது. அதே வேளையில் திமுது ஆட்டிகல தாங்கள் கடத்திச் செல்லப்பட்ட விடயம் பொலிஸாருக்கு 24 மணித்தியாலங்க ளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக கூறுகின்றார்.

இவர்களது கட்சி திமுது ஆட்டிகல ஏப்ரல் மாதம் 6ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அவர் காணாமல் போனதாக அறிவித்த போதிலும், ஒரு பகுதி மட்டும் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுக்கு ஏன் திமுது ஆட்டிகல அந்த நேரத்தில் தனியாக சென்றார் என்று பாதுகாப்பு செயலாளர் வினவினார்.

பாதுகாப்பின் மீது ஆர்வம் கொண்ட எந்தவொரு கட்சியும் இவ்விதம் காலதாமதப்படுத்தி செயலாற்றியிருக்காது என்றும் அவர் சொன்னார்.

இந்தக் கட்சியின் முறைப்பாட்டில் பிரேம் குமார் குணரட்னம் என்பவரே காணாமல் போனார் என்று அறிவிக்கபட்டது என்றும் அவுஸ்திரேலிய பிரஜை நொயல் முதலிகே பற்றி கட்சி எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.

இது பற்றி தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, எப்போது குணரட்னம் காணாமல் போன விடயம் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டது பற்றி தாம் அறிந்தும் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

தற்போது அவுஸ்திரேலிய கடவுச்சீட்டை பெற்றுள்ள இந்த மனிதர் வேற்று நாடொன்றின் கடவுச்சீட்டை பெறுவாரா? இல்லையா? என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment