Sunday, April 15, 2012

இலங்கைக்கு ஆறு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம்? - ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ செய்தி வெளியிட்டுள்ளது!

Sunday, April 15, 2012
சென்னை::இலங்கைக்கு ஆறு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ செய்தி வெளியிட்டுள்ளது.சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை செல்லும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தமது கட்சியின சார்பில் நாடாளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் திமுக தலைமை இருப்பதாகவும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தக் குழுவுக்கு பெயர் குறிக்கப்பட்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னாட்டை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கை அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியும் இதே கருத்தையே தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடும் போது வெளிப்படுத்தியுள்ளார்.

புனர்வாழ்வுக்காக இதுவரை முகாம்களில் காத்திருக்கும் தமிழ்மக்களின் சார்பில் பேசுவதற்கு அனுமதிக்காத இந்தப் பயணத்தினால் என்ன பயன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment