Monday, April 23, 2012இலங்கை::இந்திய பாராளுமன்ற குழுவின் இலங்கை விஜயம் எதிர்பார்த்த அளவு வெற்றியளித்துள்ளதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட இந்திய எதிர்க் கட்சித் தலைவி ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகள் ஆக்கபூர்வமானதாக இருப்பதாகவும் அதனை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் தாம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்த இந்திய நாடாளுமன்ற குழுவின் தலைவியும் இந்திய எதிர்க் கட்சித் தலைவியுமான ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ், இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
இலங்கை விஜயம் குறித்து மேலும் கூறிய அவர்,
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுற்ற எல். ரி. ரி. ஈ. இயக்கத்துடனான யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியன சீராக நடைபெற்று, அதன் அடிப்படையில் இலங்கையில் நிரந்தரமான பரந்த அடிப்படையிலான சமாதானம் நிலைபெற்று இருக்கிறதா? என்பதை நேரில் கண்டறி வதற்காக நாம் இலங்கைக்கு விஜயம் செய்தோம். இதன்போது பலதரப்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியளித்துள்ளது.
இந்திய அரசு இலங்கையில் முன் னெடுக்கப்படும் மீள் குடியேற்றம் புனர் வாழ்வு நடவடிக்கைகளுக்கு தமது பூரண உதவியையும், ஒத்துழைப்பையும் என்றும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது.
நாம் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர், பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் விரிவான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
பல தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வருவதே தங்களின் இந்த விஜயத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்றார்.
உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேலும் முன்னேற்றம் அடைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இல்லங்களில் மீள்குடியேற்றப்படும் வரை இந்திய அரசாங்கத்தின் கவனம் திசைதிரும்பமாட்டாது. இதற்காக நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பங்காளிகளாக சகல உதவிகளையும் நட்புறவுடன் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் நல்ல ஆக்க பூர்வமான சிபாரிசுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலமே யுத்தத்தினால் ஏற்பட்ட வேதனை வடுக்களை மாற்றி, நிரந்தர சமாதானத்தையும், நல்லிணக்கப்பாட்டையும் இலங்கையில் ஏற்படுத்த முடியும்.
இலங்கைக்கு மேற்கொண்ட நான்கு நாள் விஜயத்தின் போது நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசினை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினோம்.
காணாமற் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய வேண்டும் அதற்கான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக் குழுவின் யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
இராணுவத்தினரின் கைவசம் உள்ள தனியார் காணிகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். மற்றும் வட பகுதியில் இருந்து இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மீண்டும் வட மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் போன்ற யோசனைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொண்டோம்.
13 ஆவது திருத்தத்துக்கு கூடுதலாக உரிமைகளைக் கொடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து கூடிய விரைவில் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொண்டோம்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் உட்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கும் இந்தியா என்றும் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கின்றது என்ற கருத்தையும் நாம் வலியுறுத்தினோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது நல்லிணக்க ஆணைக்குழுவின் +றிக்கையை உடனடியாக, காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
அதற்கு, இன்முகத்துடன் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கமும் நல்லிணக்க ஆணைக் குழுவின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வத்துடன் இருக்கின்றது. இதனை பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலமே சரியான முறையில் நடைமுறைப்படுத்தலாம்.
அதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய சில எதிர்க் கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன. என்னால் இதைவிட என்ன செய்ய முடியும். அவர்களை பலவந்தப்படுத்தி பாராளுமன்றத் தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வைக்க என்னால் முடியாது என்று தங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொன்னதாக ஸ்ரீமதி சுஸ்மா சுவராஜ் கூறினார்.
அதற்கு இந்தியத் தூதுக் குழுவின் தலைவி என்ற முறையில் நான், நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஏனைய கட்சிகளையும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அவர்களை கலந்துகொள்ள வைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டதாக சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இலங்கை வந்துள்ள இந்தியப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும், அரசியல் கட்சிகளையும் அங்கத்துவம் வகிக்கும் 12 பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்தத் தூதுக் குழுவில் ஜெயலலிதாவின் அ. தி. மு. க.வும் கருணாநிதியின் தி. மு. க.வும் இடம்பெறாத போதிலும் தமிழ்நாட்டில் இருந்து 5 உறுப்பினர்கள் இந்தத் தூதுக் குழுவில் இடம்பெறுகிறார்கள் என்று கூறினார்.
No comments:
Post a Comment