









Wednesday,April,18, 2012 http://www.youtube.com/watch?v=GvPQB4hQoZI&feature=player_embedded
இலங்கை::இந்திய பாராளுமன்ற குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டனர். இக்குழு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தை, ஹெலிகொப்டரில் சென்றடைந்தனர். இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் இந்திய பாராளுமன்றக் குழுவினரை வரவேற்றனர்.
யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் தங்கியிருந்து அரசியல் கட்சிகளையும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளனர்...
போருக்குப் பின்னரான இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு தாம் பிரமிப்பு அடைந்துள்ளதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தந்திருந்த சுஸ்மா சுவராஜ் மத்திய கல்லூரி மைதானத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அழைப்பிற்கிணங்க தாம் இங்கு வருகை தந்துள்ளதாகவும் இங்கு அமைச்சர் அவர்களுடன் நேரில் சென்று பல இடங்களைப் பார்வையிடவுள்ளதாகவும் கேட்டறிய உள்ளதாகவும் தெரிவித்தார்.
போருக்குப் பின்னரான இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் எழில்மிகு தோற்றம் மற்றும் அதன் அபிவிருத்தி குறித்து தாம் பிரமிப்பு அடைந்துள்ளதாகவும் சுஸ்மா சுவராஜ் இதன்போது சுட்டிக் காட்டினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையின் கீழும் வழிகாட்டலுடன் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்றும் அத்துடன் கிடைக்கப் பெறுகின்ற அனைத்து வளங்களையும் கொண்டு யாழ்ப்பாணத்தை மென்மேலும் அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்வதே தமது நோக்கமெனவும் தெரிவித்தார்.
இதேநேரம் மைதானத்தில் கூடியிருந்த மக்களுக்கு சுஸ்மா சுவராஜ் இந்திய மக்களின் சார்பில் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவில் ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் பி.ஜே.பி. ஐக்கிய ஜனாதா பிஜூ ஜனாதா சமாஜவாத கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கைக்கு 06 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர் இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் மக்களது வாழ்வாதாரம் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றனர்....
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இரண்டு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இந்திய நாடாளும்றக் குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் (அசோக்), சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) ஆகியோர் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.
முன்பதாக இக்குழுவினர் இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிட்டதுடன் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலவரங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.
அதன் பின்னதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கும் அங்கு மீள்குடியேற்றம் இடம்பெற்ற சில பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு அங்கிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு மத்திய கல்லூரி மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் இலங்கை மற்றும் இந்திய தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment