Thursday, April 19, 2012

ரூ14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி : மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

Thursday, April, 19, 2012
புதுடெல்லி::ராணுவத்துக்கு டட்ரா வாகனங்கள் வாங்க ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தலைமை தளபதி வி.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி ரெய்டு நடத்தியது. இந்திய ராணுவத்தில் வீரர்களையும், தளவாடங்களையும் ஏற்றிச் செல்ல அனைத்து சாலைகளிலும் செல்லக்கூடிய டட்ரா டிரக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செக் குடியரசு நாட்டின் தயாரிப்பான இந்த வாகனங்களின் பாகங்களை லண்டனை சேர்ந்த வெக்ட்ரா என்ற நிறுவனம் மத்திய அரசின் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு சப்ளை செய்கிறது. பிஇஎம்எல் நிறுவனம் இதனை அசெம்பிள் செய்து ராணுவத்துக்கு வழங்கி வருகிறது. கடந்த 86ம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரம் டட்ரா வாகனங்கள் இந்திய ராணுவத்துக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. கடைசியாக 700 வாகனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி கொடுக்க முன்னாள் தளபதி ஒருவர் தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கடந்த மாதம் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி உத்தரவின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தலைமை தளபதி வி.கே.சிங்கும் முறைப்படி புகார் அனுப்பினார். வெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் ரவீந்தர் ரிஷி, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வி.மோகன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து பிஇஎம்எல் நிறுவனத்தின் தலைவர் நடராஜனிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேர் வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள வெக்ட்ரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் வீட்டிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து இந்த சோதனையை நடத்தினர். பிஇஎம்எல் தலைவர் நடராஜன், வெக்ட்ரா நிறுவன தலைவர் ரிஷி ஆகியோரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஊழல் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது ராணுவ வட்டாரத்தில் மட்டுமின்றி டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment