Wednesday,April,18, 2012இலங்கை::யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வன்னியிலுள்ள நலன்புரி முகாம்களில் இன்னமும் தங்கியுள்ள பொதுமக்களை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேற்படி நலன்புரி முகாம்களுக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் உறுதியளித்துள்ளார்.
மேற்படி நலன்புரி முகாம்களின் இன்னமும் சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் தங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற எம்.பி.க்கள், இன்று புதன்கிழமை வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினர்.
இந்த விஜயத்தில், மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மேற்படி முகாம்களில் வசித்து வரும் பொதுமக்கள், 'சொந்த இடங்களில் தங்களை மீள்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் இது தவிர, தங்களுக்கு வேறு எந்தத் தேவையும் இல்லை என்றும்' இந்திய தூதுக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்தே, குறித்த நலன்புரி முகாம்களில் வாழும் மக்களை, எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment