
இலங்கை::இலங்கையின் அரசியலமைப்பை நிறைவேற்றுவதும், அதிகாரத்தை பரவலாக்குவதும் இலங்கைப் பாராளுமன்றத்தின் வேலையே தவிர இந்தியப் பாராளுமன்றத்தின் வேலையல்ல என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் நாட்டின் இறைமைக்கு அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு உண்மைகளை அறிந்துகொள்வதற்காக இந்திய பாராளுமன்றக் குழுவினர் வந்துள்ளமையை வரவேற்கின்றோம்.
ஆனால் இலங்கையின் இறைமைக்கு இக்குழு கட்டுப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் புலி இயக்க ஆதரவாளர்களும் உலகம் பூராகவும் பிரசாரம் செய்யும் பொய்யான கருத்துக்களை இந்தியக் குழு கவனத்தில் கொள்ளாது பொதுவாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மேலகம் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும். அதன்போது உண்மை நிலைமையை அறிய முடியும். இம்மக்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாணம், வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களின் பின்னடைவுக்கும் அவர்களது இன்றைய நிலைமைக்கும் இலங்கை அரசாங்கமோ சிங்கள மக்களோ பொறுப்பாளிகள் அல்லர்.
தமிழ் நாட்டிலுள்ள தமிழ் இனவாத பிரிவினைவாத சக்திகளின் ஆசிர்வாதத்துடன் இயங்கிய விடுதலைப் புலிப் பயங்கரவாதமே, தமிழ் மக்களின் இன்றைய நிலைமைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
சிங்கள, முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்காக அழித்தொழித்து 3 இலட்சத்திற்கும் மேலான மக்களை வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றினர். இதனை இந்தியக் குழுவினர் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடுக்கின்றனர். இதுதான் உண்மை.
இந்தியாவில் பிரச்சினைகள் தொடர்பில் நாம் தலையிடுவதில்லை. அதேபோன்ற கொள்கையை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரத்தைப் பரவலாக்குவதும், அரசியலமைப்பை நிறைவேற்றுவதும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தேவையாகும். அது இந்தியப் பாராளுமன்றத்தின் வேலை அல்ல.
இலங்கையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும் இந்தியா சென்று கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இச் செயலானது எமது நாட்டின் இறைமையை அகௌரவப்படுத்தும் செயலாகும் என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment