Tuesday, April 24, 2012

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு கொலை அச்சுறுத்தல்!

Tuesday, April, 24, 2012
இலங்கை::முல்லேரியாவில் கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கொலை அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு இன்று 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கின் முக்கிய சாட்சியான ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த துமிந்த சில்வா தரப்பு சட்டத்தரணி, குறித்த விடயம் கொலை வழக்குடன் தொடர்புபட்டதல்ல எனவும் அதனால் அது குறித்து உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்க நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை எனவும் வாதிட்டார்.

எனினும் பாராத லக்ஷ்மன் கொலை வழக்கின் முக்கிய சாட்சியாளர் ஹிருனிகா எனக் குறிப்பிட்ட பாராத லக்ஷ்மன் தரப்பு சட்டத்தரணி, அவருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் குறித்து ஆராயுமாறு உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ், இந்த கொலை அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment