Tuesday, April, 24, 2012சென்னை::ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால் இலங்கை அதிருப்தியுடனும், கோபத்துடனும் உள்ளதாக இலங்கைக்கு சமீபத்தில் சென்று வந்த இந்திய எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பியான மாணிக்க தாக்கூர் கூறியுள்ளார்.
விருதுநகர் எம்.பியான மாணிக்க தாக்கூர், ராகுல் காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர். இவர் தனது இலங்கை பயணம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில், வடக்கில், ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் அனுமதி இல்லாமல் அங்குள்ள மக்கள் எதையும் செய்ய முடிவதில்லை. எதற்கெடுத்தாலும் ராணுவத்தின் அனுமதியைக் கேட்க வேண்டியுள்ளது. இதுகுறித்து நாங்கள் ராஜபக்சேவிடம் கூறினோம். அதற்கு அவர் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ராணுவத்தை விலக்கிக்கொள்வதாக உறுதியளித்தார் (ஆனால், இந்தியக் குழுவினர் இந்தியா திரும்பி உட்காருவற்குள் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என்று ராஜபக்சே அரசு கூறியது நினைவிருக்கலாம்.)
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ. 25,000 கோடி நிதியை இந்தியா வழங்கியுள்ளது. இந்தப் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதைப் பார்ககவே நாங்கள் முக்கியமாக சென்றோம். சில பணிகள் நல்ல முறையில் நடக்கின்றன. பல பணிகள் சரிவர நடக்கவில்லை.
முள்வேலி முகாம்களில் முன்பு 2.90 லட்சம் பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது வெறும் 6500 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களும் கூட அவர்களது பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் போய் விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது இன்னும் கூட இலங்கைக்கு அதிருப்தியையும், கோபத்தையும் கொடுத்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் நிலையை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அங்கு இலங்கை மீனவர்களையும் நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் இந்திய மீனவர்கள்தான் அத்துமீறி வருவதாகவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு மீன் பிடிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் விரைவில் கொழும்பு-மதுரை இடையே விமான சேவை தொடங்கப்படும் என்றும் ராஜபக்சே உறுதியளித்தார் என்றார் தாக்கூர்.
No comments:
Post a Comment