Sunday, April 15, 2012

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு : உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை!

Sunday, April 15, 2012
புதுடெல்லி::உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதம், நக்சலைட் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்க டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நாளை நடக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் மாநாட்டில் ஜெயலலிதா, மம்தா, நரேந்திர மோடி உள்பட அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு நடக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால், மாநாடு தள்ளிப்போனது. இதற்கிடையே, தீவிரவாதத்தை ஒடுக்க மாநிலங்களில் தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்படும் என்றும், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது என்று கூறி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்பட பல முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தீவிரவாத தடுப்பு மையம் குறித்து மாநில அரசுகளுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, முதல்வர்கள் மாநாட்டில் இதுகுறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டது. இதற்கும் மோடி, ஜெயலலிதா உள்பட பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீவிரவாத தடுப்பு மையம் என்பது மிக முக்கியமான பிரச்னை. இதுகுறித்து தனியாக விவாதிக்க வேண்டும் என்று கூறினர். இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, மே 5ம் தேதி இந்த பிரச்னை குறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மாநில முதல்வர்கள் மாநாடு நாளை நடக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகிக்கிறார். மாநாட்டில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒழிப்பது, கடலோர மற்றும் நாட்டில் எல்லை பகுதிகளை பாதுகாப்பது, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது, நக்சல்களை ஒடுக்குவது, ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள நிலைமை, கள்ளநோட்டு உள்பட பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை தடுப்பது, மத தீவிரவாதத்தை ஒழிப்பது போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பிரச்னைகளை சமாளிக்க தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவது, அதற்காக பாதுகாப்பு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, சிறந்த முறையில் உளவுத் தகவல்களை பரிமாறி கொள்வது, தீவிரவாத தடுப்புக்கு போதிய வெடிபொருட்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்வது உள்பட முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட உள்ளது. முதல்வர்கள் மாநாடு முடிந்த பிறகு, வரும் 17ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மாநில உள்துறை செயலர்கள் மாநாடு நடக்கிறது. ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை காலை 6 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். அவருடன் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் உயரதிகாரிகள் செல்கின்றனர். சட்டசபை கூட்டம் நடப்பதால், மாநாடு முடிந்ததும் நாளை மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

No comments:

Post a Comment