Saturday, April 14, 2012

யாழ்-மாநகரத்தின் சுத்தம் சுகாதாரம் தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று யாழ் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது!

Saturday, April, 14, 2012
இலங்கை::யாழ். மாநகர சபையின் வருவாய் அதிகரிப்பு தொடர்பாகவும் அதிகரிக்கப்படக் கூடிய வருவாயை மக்கள் நலன்சார்ந்து நியாயமான வழிமுறைகளில் பயன்படுத்துதல் மற்றும் யாழ். மாநகரத்தின் சுத்தம் சுகாதாரம் தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று யாழ் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது யாழ். மாநகர சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வர்த்தக நிறுவனங்களில் நிலுவையிலுள்ள வரித் தொகைகளை அறவிடுவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேநேரம் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகள் கருதி மாநகர சபைக்குரிய வருவாயை அதிகரிப்பது தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

யாழ். மாநகரின் சுத்தம் சுகாதாரம் தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நகரின் சுத்தம் சுகாதாரம் தொடர்பில் தனது திருப்தி இன்மையை வெளிப்படுத்தியதுடன் நகரின் துப்பரவுப் பணிகளை ஒரு பகுதியின் பரீட்சார்த்த முறையாக தனியார்துறை வசம் ஒப்படைப்பது தொடர்பிலும் தான் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம் கோம்பயன்மணல் மயானத்தை நவீனமயப்படுத்துவது சுற்றுமதில் அமைப்பது தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டதுடன் வெகுவிரைவில் சுற்றுமதில் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஸ்மி உள்ளூராட்சி ஆணையாளர் திரு. ஜெகூ யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆணையாளர் கணக்காளர் உட்பட மாநகர சபையின் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment