Friday, April 20, 2012

ராமர் பாலம் தொடர்பில் எவ்வித நிலைபாடும் எடுக்கவில்லை - இந்திய மத்திய அரசு!

Friday, April, 20, 2012
புது டெல்லி::இந்திய இலங்கை கடற்பரப்பில் உள்ள ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பில் எவ்வித நிலைப்பாடையும் எடுக்கவில்லை என இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இலங்கை இந்திய கடற்பரப்பில் உள்ள மணற்திட்டுக்கள் ராமர் கட்டிய பாலம் என்பதால் அவற்றை தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ராமர் பாலத்தை சேதப்படுத்தி அதன் குறுக்கே சேதுக்கால்வாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குறித்த பிரதேசத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக எவ்வித நிலைப்பாடும் இல்லை என மத்திய அரசின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதற்கமைய சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை குறித்து உரிய பதில் அளிக்க மத்திய அரசுக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இந்த மணல் திட்டுக்களை ராமர் பாலம் என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இதை இந்திய மத்திய அரசு தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

எவ்வாறாயினும் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நிலைப்பாட்டுக்கு தொடர்ந்தும் எதிரப்பை வெளிப்படுத்திவருகிறது. இதற்கமைய சேதுக்கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு தடையாக இருக்கும் இந்த மணல் திட்டுக்கள் சிலவற்றை அப்புறப்படுத்தும் திட்டத்திற்கு அந்த கட்சி ஆதரவளித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதன் மூலம் அரசியல் சிக்கலில் சிக்குவதற்கு மத்திய அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த மணற்திட்டுக்களை ராமர் பாலம் என்றும் தேசிய சின்னம் என்றும் அறிவிப்பதன் மூலம் இந்துத்துவ சக்திகளை திருப்திப்படுத்தினால் அதன் எதிர்வினையாக இந்தியாவிலுள்ள மத சிறுபான்மையினரிடமிருந்து இதே போன்ற கோரிக்கைகள் எழலாம் என்றும் மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி அஞ்சுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment