Friday, April 20, 2012

இலங்கையில் இனப் பிரச்னைக்கு "உண்மையான அரசியல் தீர்வு' காணப்பட வேண்டும் - இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தல்!

Friday, April, 20, 2012
இலங்கை::இலங்கையில் இனப் பிரச்னைக்கு "உண்மையான அரசியல் தீர்வு' காணப்பட வேண்டும் என்று இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

அவர் தலைமையில் இலங்கை வந்திருக்கும் இந்திய எம்.பி.க்கள் குழு பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் நிலைமையை ஆய்வு செய்து வருகிறது.

தெற்கு இலங்கையில் உள்ள அளுத்கமை நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அளுத்கமை - களுத்துறை இடையிலான மேம்படுத்தப்பட்ட பாதையில் ரயில் போக்குவரத்தை சுஷ்மா தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய அவர், ""பொருளாதார ரீதியில் இலங்கை வளர்ச்சி கண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே வேகத்தில், இனப் பிரச்னைக்கும் உண்மையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்'' என்றார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கலாசார, மொழி, மத ரீதியிலான நெருக்கம் உண்டு என்று குறிப்பிட்ட அவர், அதே போல தமக்கும் இலங்கைக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்பு உண்டு என்று தெரிவித்தார்.

நான் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். இங்குதான் புத்தர் தனது கொள்கைகளை பிரசாரம் செய்த சாஞ்சி பகுதி இருக்கிறது'' என்றார் சுஷ்மா.

அவர் இவ்வாறு குறிப்பிட்டதும் அங்கு கூடியிருந்த சிங்களர்களும் பெüத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சியில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்ன, ""இலங்கையில் தமிழர் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா உதவ வேண்டும். இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான். அதனால், இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் உதவ வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது'' என்றார்.

அளுத்கமை - களுத்துறை இடையேயான ரயில் பாதையை மேம்படுத்துவதில் அனைத்து வகையான நிதி, தொழில்நுட்ப உதவிகளைச் செய்ததற்காகவும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணிகளை முடித்ததற்காகவும் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்துக்கு (இர்கான்) இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார வெலகாம நன்றி தெரிவித்தார்.

முதல் எதிர்க்கட்சித் தலைவர்: இந்த ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், வெளிநாட்டில் இந்திய நிதியுதவியுடன் உருவான திட்டம் ஒன்றை தொடங்கி வைத்த முதல் எதிர்க் கட்சித் தலைவர் என்கிற பெருமை சுஷ்மா ஸ்வராஜுக்கு கிடைத்திருக்கிறது.

முன்னதாக, இந்தச் சேவையை சுஷ்மா தொடங்கி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்த கோரிக்கையை, இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரயில் போக்குவரத்துக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக இந்தியா சார்பில் ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment