Thursday, April, 26, 2012இலங்கை::ஒரு சில பௌத்த மத குருக்களின் நடவடிக்கைக்கு முழு பௌத்த சமூகமும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கிழக்கு மாகாண இராணு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால்பெரேரா தெரிவித்தார்.
நேற்று (25.4.2012) மாலை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் உலமாக்களை காத்தான்குடியில் வைத்து சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியால கட்டிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி,
“தம்புள்ள பள்ளிவாயல் சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்த செய்யும் நடவடிக்கையாகும்.
ஒரு சில பௌத்த மதகுருக்களின் நடவடிக்கையைக்கொண்டு முழு பௌத்த மக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
யார் பிழை செய்தாலும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முஸ்லிம் மக்கள் அமைதியை கடைப்பிடிக்கு மாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இலங்கைக்கெதிரான ஜெனீவா பிரேரணையின் போது முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கே பூரண ஆதரவு அளித்ததை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
நாட்டில் மூன்று வருடங்களாக சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையை குழப்புவதற்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இந்த சமாதானத்தை மேலும் ஸ்த்திரப்படுத்த குறிப்பாக முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
தம்புள்ள பள்ளிவாயல் சம்பவத்தை ஊடகங்கள் திரிவுபடுத்தியுள்ளன. இதனை பலரும் தங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பயன் படுத்திக்கொண்டு பல விதமான இலபாத்தை தேட முற்படுகின்றனர்.
இதுவிடயத்தில் முஸ்லிம் மக்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் பல தரப்ப்பட்ட கேள்விகளை இராணுவத் தளபதியிடம் கேட்டனர்.
அநுராதபுரம் தர்ஹா உடைப்பு விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. தம்புள்ள ரங்கினியிலுள்ள வாணொலி அலைவரிசையே இன முறன் பாட்டை தூண்டி வருகின்றது.
தம்புள்ள பள்ளிவாயல் சம்பவம் திட்ட மிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்.
ஏன் இதை அரசாங்கம் இது வரைக்கும் கண்டிக்கவில்லை. உரிய பாதுகாப்பு ஏன் வழங்கப்படவில்லை என்பன போன்ற கேள்விகளை இதன் போது கேட்டதுடன் தம்புள்ள சம்பவம் தொடர்பில் தமது விசனங்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் உட்பட முக்கியஸ்த்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிகேடியர் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment