Sunday, April, 22, 2012சென்னை::இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம், இந்திய எம்பிக்கள் குழு வலியுறுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழு, கடந்த 16ம் தேதி டெல்லியில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டது. வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர் பகுதிகளை பார்வையிட்டது. 6 நாட்கள் சுற்றுப்பயணம் முடித்து கொண்டு நேற்று இந்தியா திரும்பியது. இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், சத்தியமூர்த்தி பவனில் நேற்று மதியம் அளித்த பேட்டி: என்.எஸ்.வி.சித்தன்: வவுனியாவில் மாணிக்பாம் முள்வேலி முகாமில் 3 லட்சம் பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இப்போது 6 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் அனை வரும், அவரவர் சொந்த இடங்களுக்கு குடியேறி விட்டனர். முகாம்களில் இருந்த பெண்கள், சொந்த ஊரில் குடியேற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதுதொடர்பாக, இலங்கை அரசிடம் பேசினோம். அங்கு கண்ணி வெடிகள் அதிகமாக இருக்கிறது.அதை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்கள்.
எம்.கிருஷ்ணசாமி: தமிழர்கள் பகுதியில் 50 ஆயிரம் வீடுகள் இந்திய அரசின் நிதியில் கட்டப்பட்டு வருகிறது. அந்த வேலைகள் மிகவும் மெதுவாக நடக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வாழும் இடங்களில் ராணுவத்தினர் முகாமிட்டுள் ளனர். ராணுவத்தை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும். அப்போதுதான், அங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியும். இதுகுறித்து, ராஜபக்சேவிடம் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 1988ல் ராஜிவ்காந்தி, ஜெயவர்த்தனே இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை 13வது ஷரத்தை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரினோம். மாணிக் தாகூர்: இலங்கையில் போரின்போது 1,113 பள்ளிகள் சேதமடைந்தன. அவற்றை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 900 பள்ளிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லை. அதனால், தமிழகத்தில் உள்ள நல்ல படித்த தகுதியான ஆசிரியர்களை பணியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் சுய உதவிக்குழுக்களை அமைக்க, இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்ததால், அந்த பகுதி ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், வடக்கு மாகாணத்தில் இன்னும் தேர்தல் நடைபெறவில்லை.
சுதர்சன நாச்சியப்பன்: கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தற்போது குடியமர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. சுதந்திரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். எங்கள் பின்னால் ராணுவமோ அல்லது போலீசோ வரவில்லை. மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். அதை ராஜபக்சேவிடம் தெரிவித்தோம். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடந்தது. இது வெறும் சந்திப்பாக இல்லை. நாங்கள் கேட்கும் கேள்விக்கு, ராஜபக்சே பதில் அளிப்பது. அவருடைய கேள்விக்கு நாங்கள் விளக்கம் அளிப் பது என்று ஒரு நீண்ட விவாதம் போல சந்திப்பு அமைந்திருந்தது. ராணுவம் சிறைபிடித்த 10 ஆயிரம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரம் பேர் மட்டுமே, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். உரிய விசாரணைகள் முடிந்த பிறகு, அவர்களை விடுவிக்கப்படுவார்கள். இவர்களை ராணுவம் மற்றும் போலீஸ் துறைக்கு பயன்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 2.5 லட்சம் இலங்கை அகதிகள் உள்ளனர். அவர்களின் வீடு, நிலம் இலங்கையில் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. அதை கண்டுபிடித்து குடியமர்த்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு ஷரத்து 13யை நிறைவேற்ற வேண்டும்.
அப்போதுதான், அங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை தயாரித்து, சுஷ்மா சுவராஜ் தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்போம். இவ்வாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினர்.
No comments:
Post a Comment