Wednesday,April,25,2012இலங்கை::கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
மாநகர சபைக்குள் தமது அணி ஏற்படுத்தியுள்ள நிலைமைக்கு அமைய முன்னோக்கிச் செல்வதற்கு, முழுநேரம் அர்ப்பணிப்புடன் மாநகர சபையின் செயற்பாடுகளில் பங்கேற்கும் தலைமைத்துவமொன்று அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் தற்போது வகிக்கும் பொறுப்புக்கள் அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாகவுள்ளதால் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாக இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இதுவே தமது தீர்மானத்திற்கான ஒரே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் விரும்புமிடத்து அவருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை எந்நேரமும் வழங்குவதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் நகர மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்ற வகையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, மாநகர சபைக்குள் வலுவான அணியொன்றை உருவாக்க கடந்த ஆறு மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் பெறுபேறாக கொழும்பு மாநகர சபையின் மிகவும் முக்கிய செயற்குழுவான நிதி செயற்குழுவின் தீர்மானமொன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அணிக்கு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய சர்வதேச அமைப்பொன்றில் பதவியொன்றை பொறுப்பேற்பது தொடர்பாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் அந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை என மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு தலைமைத்துவம் வழங்கும் சவாலுக்காக அழைப்பு விடுத்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கும், மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியில் ஒத்துழைப்பு வழங்கி ஊக்குவித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
நாடு மற்றும் மக்களுக்கான தமது அர்ப்பணிப்பு எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்தும் பேணப்படும் என இன்று நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி குழுக்கூட்டத்தின் போது மிலிந்த மொரகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்...
கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக மிலிந்த மொரகொட இன்று புதன்கிழமை சற்று முன்பு அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment