Wednesday, April 25, 2012

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்!

Wednesday,April,25,2012
ராமநாதபுரம்::கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது. கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் பருந்து விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில் லா விமானங்களை இயக்க இயலும். இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண் காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment