Wednesday,April,25,2012நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கான தனது மூன்று நாட்கள் பயணத்தை இன்று ஆரம்பிக்கும் பான் கீ மூன், அதற்கு முன்பாக நேற்று செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கு மாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் கேட்டபோது, இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் அது தொடர்பான விசாரணைகள் பகிரங்கமாக, பக்கச்சார்பற்ற வகையில் நடப்பதை உறுதிப்படுத்துவதற்கும் தீர்மானம் மிக முக்கியமானது என கூறியுள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் கவலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது மனித உயிர்களுக்கு முதலாவதும் மிக முக்கியமானதுமான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் நீதியாகவும் மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே மிகச்சரியான தருணம் எனவும் பான்-கீ- மூன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பயணத்தின்போது பான், மூத்த அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்துப் பேச்சு நடத்துவார். மும்பை, டில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்லவுள்ளார்.
No comments:
Post a Comment