Monday, April 23, 2012

சரத்குமாரின் இரட்டை வேடம்: அ.தி.மு.க.,வினர் அதிருப்தி!

Monday, April 23, 2012
சென்னை::சட்டசபையில் மதிய உணவு விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியினர் தெரிவித்த கருத்துக்கு, கூட்டணிக் கட்சியின் தலைவரான சரத்குமார், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளுங்கட்சியினரின் ஒருமித்த கருத்து இல்லாததால், அ.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைச் சரிக்கட்டுவதற்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, சரத்குமார் விமர்சித்து, இரட்டை வேடம் போடுகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து, தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் நாராயணனும் வெற்றி பெற்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறாமல், தனித்துப் போட்டியிட்டன. அ.தி.மு.க., கூட்டணியில் ச.ம.க., தொடர்ந்து நீடிக்கிறது.

சலசலப்பு
சட்டசபையில், சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பேசும்போது, மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார் என்றதும், அமைச்சர் வளர்மதி குறுக்கிட்டு தெரிவித்த கருத்துக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காமராஜர் தான் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார் என்பதை சுட்டிக்காட்டி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அமைச்சர் பெயர் குறிப்பிடாமல் பட்டும், படாமலும் விமர்சனம் செய்திருந்தார். அந்த அறிக்கையில் ஆளுங்கட்சியின் ஒருமித்த கருத்து இடம் பெறவில்லை என்ற அதிருப்தி, அ.தி.மு.க.,வினர் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சட்டசபைக்கு வராமல் இருப்பது குறித்த விவாதத்தில், தனது பங்குக்கு விஜயகாந்தை, சரத்குமார் சாடியுள்ளார். இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் காட்டியிருக்கிறார். ஆளுங்கட்சிக்கு எதிரிக் கட்சியாகக் கருதப்படும் தே.மு.தி.க.,வை, அவரும் எதிரிக் கட்சியாக பாவிக்கிறார் என்ற பேச்சும், பொதுவாக அடிபடுகிறது. இந்த இரட்டை வேடத்தை பலரும் விமர்சிக்கின்றனர்.

எடுபடாது
இது குறித்து கட்சிப் பிரமுகர் கூறும் போது, "சினிமாவில் சரத்குமார் நடித்த இரட்டை வேடம் படம் ஓடலாம். ஆனால், அரசியலில் அவரது இரட்டை வேடமெல்லாம் எடுபடாது. ஆளுங்கட்சியின் கருத்துக்கு ஒத்த கருத்துடன் செயல்பட்டால் தான், கூட்டணிக் கட்சிக்கு தர்மம். ஆனால், கூட்டணிக் கட்சியின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை அறிக்கை மூலம் தெரிவிப்பதை ஏற்க முடியாது' என்றார்.

பதவிகள் ஏலம்
மாவட்ட வாரியாக நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு அமைப்பாளர் வீதம், 234 அமைப்பாளர்கள் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைப்பாளர் பதவிக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம், கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என, அப்பதவிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலம் விடப்பட்ட பதவிகள் மூலம், இரண்டு கோடியே 34 லட்ச ரூபாய் வசூலாகவுள்ளது.
வரும் 28ம் தேதி, மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. வரும் ஜூன் மாதம் 15ம் தேதி, சேலத்தில் காமராஜர் பிறந்தநாள், சரத்குமார் பிறந்தநாள், நலத்திட்ட உதவி வழங்கும் நாள் என, முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அக்கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகள் கிலி
கட்சிக்கு நிதி வசூல் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய், 1,000 ரூபாய், 5,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என, நன்கொடை டிக்கெட்டுகள் கட்சியினருக்கு அச்சடித்து வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம், 10 லட்ச ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும், அதிகமாக வசூலிக்கும் மாவட்ட செயலருக்கு கமிஷன் தொகையும் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தையும், கட்சியினருக்கு கூறப்பட்டுள்ளது. "பெரிய கட்சிகளுக்கு நிதி திரட்டுவதற்கு கட்சியினர் விழிபிதுங்குகின்றனர். இந்த நிலையில், லட்சக்கணக்கில் நாங்கள் எப்படி நிதி திரட்ட முடியும்' என கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment