Tuesday, April, 17, 2012இலங்கை::முன்னிலை சோஷலிச கட்சியின் இரண்டு முக்கிய அங்கத்தவர்கள் கடத்தப்பட்ட விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நவம்பர் மாதம் நடைபெறும் மதிப்பீட்டுக் கூட்டத்தின்போது கருத்திற் கொள்ளப்படவுள்ளதால் இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகள் எவ்வளவு தூரம் சென்றுள்ளன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டியிருக்கும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் கடத்தல் விடயம் நிச்சயமாக கருத்தற்கொள்ளப்படும். குற்றவாளிகளை கைது செய்து விசாரணையில் அக்கறையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவிடயம் என அவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இரண்டாவது அமர்வு இவ்வருடம் நவம்பரில் நடைபெறும். இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மதிப்பீடும் இடம்பெறும். இதற்காக ஐ.நா. மற்றும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் தத்தம் நியாயங்கள், விளக்கங்களை ஏப்ரல் 23 ஆம் திகதிக்குமுன் கையளிக்க வேண்டும்.
17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குதல், சட்டத்தின் ஆட்சி, ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களுடன் கடத்தலும் காணாமல் போதலும் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரின் கடத்தலுக்கு அப்பால் திருகோணமலையில் 5 மாணவர்கள் காணாமல் போனமை, கடந்த பல வருடங்களில் பலர் காணாமல் போனமை, உதலகம ஆணைக்குழு முதலானவை குறித்து அரசாங்கம் தகவல்களை வழங்க வேண்டியிருக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
இலங்கை மீது ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டியவரும். எனவே இவை தொடர்பில் அடைந்த முன்னேற்றங்களை விளக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment