Tuesday, April, 17, 2012சென்னை::ஜெயலலிதா போடும் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டோம் என்றும் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும், அநியாயங்களுக்கு எதிராக போராடுவான் என்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆவேசமாக பேசினார்.
மின் கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னை திருவொற்றியூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மின்கட்டண உயர்வு சாதாரண பொதுமக்களை மட்டும் பாதிக்கவில்லை, பல்வேறு சிறு தொழில்முனைவோரையும் கடுமையாக பாதித்துள்ளது என்றார்.
கட்டண உயர்வால், பல்வேறு தொழில் நிறுவனங்களை மூடும் நிலைக்கு சென்றுள்ளன என்றும் இதனால், தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர் என்றும் கனிமொழி கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று தெரிவித்த கனிமொழி, பால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையை குறைக்கிறார். மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, சி.எப்.எல். பல்புகளின் விலையை குறைக்கிறார் என்றார்.
வாட் வரி உயர்த்தப்பட்டதால் ஒரு மூட்டை அரிசிக்கு ரூ.50 விலை உயர்ந்துள்ளது என்று கூறிய கனிமொழி, தமிழகத்தின் அரிசிதான் முக்கிய உணவு என்றும் கோதுமை, ஓட்ஸ் விலையை ஜெயலலிதா விலையை குறைத்தது ஏன் என்று புரியவில்லை என்றார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.2,376 கோடி உபரியாக உள்ளது என்று கூறும் ஜெயலலிதா, மக்கள் கடுமையான சிரமத்தில் இருக்கும்போது, கஜானாவை நிரப்புவதில் குறியாக இருக்கிறார் என்று கனிமொழி குற்றம்சாற்றினார்.
ஒரு குடும்பத்தில் குழந்தைகளை பட்டினி போட்டுவிட்டு, வங்கியில் ரூ.1,000 சேமிப்பு செய்யும் குடும்ப தலைவரை என்னவென்று சொல்வீர்கள்? மக்களை பட்டினி போட்டுவிட்டு, அரசு கஜானாவை நிரப்பும் ஒரு அரசு அரசா? என்று வினா எழுப்பியுள்ளார் கனிமொழி.
''கே.பி.பி.சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்பட தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சிறையில் அடைக்கலாம். ஆனால், `அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று கூறும் கருணாநிதியின் தொண்டர்கள் நாங்கள். இதுபோன்ற வழக்குகளையெல்லாம் கண்டு அஞ்சமாட்டோம். ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும், இந்த அநியாயங்களுக்கு எதிராக போராடுவான்'' என்று கனிமொழி கூறினார்
No comments:
Post a Comment