Monday, April 23, 2012

இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை கேட்பதாகவும் தமிழீழம் வேண்டுமென்று எவரும் கோரவில்லை - கே.ரங்கராஜன் எம்.பி.!

Monday, April, 23, 2012
சென்னை::இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வை கேட்பதாகவும் தமிழீழம் வேண்டுமென்று எவரும் கோரவில்லையெனவும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.



ஐக்கிய நாடுகளின் தலையீட்டினால் கிழக்கு திமோர், கோசோவா, மொன்ரேனிகுறோ போன்ற நாடுகள் புதிதாக தோற்றம் பெற்றதைப் போன்று இலங்கையிலும் தமிழீழம் உருவாகுவதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உட்பட கிட்டத்தட்ட சகல தமிழ்த் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

'யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரஜைகள் கூட்டத்திலும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல்த் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். தமிழீழம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை' என அவர் கூறினார்.

'நான் ஓர் இலங்கையர். இலங்கையராக மரணமடைய வேண்டுமென்று நான் விரும்புகின்றேன்' என இரா.சம்பந்தன் கூறியதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் கூறினார்.

'45,000 தமிழ் விதவைகளின் நிலைமை குறித்து எங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பில் மாத்திரம் 23,000 விதவைகள் உள்ளனர். இதில் 13,000 பேர் 23 வயதிற்கு குறைந்தவர்களாக உள்ளனர். நான் அவர்களுடன் பேசியபோது எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை' என அவர் கூறினார்.

இப்பிரச்சினையை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்ததாகவும் இதன்போது யுத்தத்தில் பலியான 30,000 படைவீரர்களினது விதவைகள் உள்ளனரென்று அவர் கூறியதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment