Tuesday, April, 17, 2012புதுடெல்லி::உள்நாட்டு பாதுகாப்பு திருப்தியாக உள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், இது சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட சில பிரச்னைகளை சமாளித்து, உள்நாட்டு பாதுகாப்பை சரிவர நிர்வகிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றையொன்று சார்ந்து பணியாற்ற வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்றார். உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், முதல்வர்கள் ஜெயலலிதா, நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், நரேந்திர மோடி, அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
பாதுகாப்பு திருப்தி: கடந்த 2011 பிப்ரவரியில், இதே உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின், கடந்த ஓராண்டாக உள்நாட்டு பாதுகாப்பு திருப்திகரமாகவே உள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும் தோளோடு தோள் நின்று ஒருங்கிணைந்து பணியாற்றியதன் பலன் தான் இது. சட்டம் - ஒழுங்கை சரிவர நடத்தி, உள்நாட்டு பாதுகாப்பை நிர்வாகம் செய்வது என்பது மிகவும் கடினமான பணி. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இது சாத்தியம். எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
நீண்ட கால போர்: மாவோயிஸ்ட் பிரச்னை, 2010ம் ஆண்டை விட 2011ல் சற்று குறைந்துள்ளது. தாக்குதல் சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனாலும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கு நிறைய பணியாற்ற வேண்டும். நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை என்பது நீண்ட கால போரைப் போன்றது. அவர்கள் பொதுமக்களை மட்டுமல்லாது, பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து தாக்குகின்றனர். தவிர, பொருளாதார கட்டமைப்புகளின் மீதும், ரயில்வே, தொலைத்தொடர்பு போன்றவை மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். இது போதாது என, தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கடத்திச் சென்று தாக்குகின்றனர். இந்த அச்சுறுத்தல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பதில், மாநில அரசுகள் தான் முன்னணியில் உள்ளன என்பது பாராட்டுக்குரியது.
சட்டம் - ஒழுங்கு "ஓகே': ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மேம்பட்டுள்ளது. நிறைய சுற்றுலா பயணிகள், புனித யாத்திரை செல்வோரின் வருகையும் அதிகரித்துள்ளது. அதேபோல, வடகிழக்கு பகுதியிலும் நிலைமைகள் மேம்பட்டுள்ளன. ஆனாலும், வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்கள் நிகழ்கின்றன. பயங்கரவாத அமைப்புகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைக்கு பலன் கிடைத்தால், அம்மாநிலங்களில் அமைதி உருவாக வழி ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment