Friday, April 20, 2012

புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், சரமாரி வெட்டி கொலை!

Friday, April, 20, 2012
திருவள்ளூர்::பூந்தமல்லி அருகே இன்று காலை புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி ஒன்றியம் திருமணம் ஊராட்சி மன்ற தலைவர் சித்துக்காடு வீரன் (38). புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு ரேவதி (30) என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இன்று அமாவாசை என்பதால் காலை 7.30 மணிக்கு கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வருவதாக மனைவி ரேவதியிடம் கூறிவிட்டு பைக்கில் சென்றார் வீரன். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, குளத்தின் அருகே பம்பு செட் தொட்டி மீது வீரன் அமர்ந்திருந்தார். அப்போது வேகமாக 2 பைக்குகள் வந்து நின்றன. அதில் இருந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென வீரனை வெட்ட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட வீரன் சத்தம் போட்டபடி, ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திச் சென்ற கும்பல், அருகில் உள்ள செங்கல் சூளை பள்ளத்தில் வீரனை மடக்கி சரமாரியாக வெட்டியது.

உடல் முழுவதும் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரன், அந்த இடத்திலேயே இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள், ரத்த வெள்ளத்தில் வீரன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரேவதிக்கு தகவல் கொடுத்தனர். அவரும் உறவினர்களும் பதறியடித்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். வீரனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எஸ்பி ரூபேஸ்குமார் மீனா, டிஎஸ்பி பாலசந்திரன், வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. வீரனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீரன், கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். வெள்ளவேடு,

திருமணம் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரன் கொலை செய்யப்பட்ட தகவல் புரட்சி பாரதம் கட்சி தொண்டர்களிடையே காட்டுத்தீ போல பரவியது. ஆவேசம் அடைந்த தொண்டர்கள், ஆண்டர்சன்பேட்டையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர். ‘கொலையாளிகளை கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம்’ என மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ‘உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என போலீசார் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, உடனடியாக திருமணம் ஊராட்சிக்கு விரைந்தார். வீரன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். திருவள்ளூர் மருத்துவமனை முன்பும் திருமணம் ஊராட்சியிலும் புரட்சி பாரதம் கட்சித் தொண்டர்கள் குவிந்துள்ளனர்

No comments:

Post a Comment