Sunday, April 15, 2012

தலிபான்கள் பயங்கர தாக்குதல், பாகிஸ்தான் சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பி ஓட்டம் : முஷாரப்பை கொல்ல முயன்றவர் உள்பட தீவிரவாதிகள் எஸ்கேப்!!

Sunday, April 15, 2012
இஸ்லாமாபாத்::பாகிஸ்தான் சிறை மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்து 384 கைதிகள் தப்பியோடி விட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ளது பன்னு மாவட்டம். பழங்குடியினத்தவர்கள் அதிகம் வசிக்கும் எல்லை பகுதியில் இந்த மாவட்டம் உள்ளது. இங்குள்ள சிறையில் ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் பன்னு நகருக்கு அருகில் உள்ள கோஹத், லக்கி மார்வத் ஆகிய சிறைகளில் இருந்த கைதிகள் பலரை, பன்னு மாவட்ட சிறைக்கு சமீபத்தில் அதிகாரிகள் மாற்றினர். இந்நிலையில் 150க்கும் அதிகமான தலிபான் தீவிரவாதிகள் இன்று அதிகாலை 1 மணிக்கு சிறையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், சிறை மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன் வெடிகுண்டுகள் வீசியும், ராக்கெட்டுகள் வீசியும் பயங்கர தாக்குதல் நடத்தினர். அப்போது சிறையில் போதிய பாதுகாப்பு வீரர்கள் இல்லை. இந்த தாக்குதலில் 3 சிறை காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்த கைதிகள் தப்பியோடினர். இதுகுறித்து பன்னு போலீஸ் அதிகாரி இப்திகார் கான் கூறுகையில், ÔÔசிறை கணக்குப்படி 994 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 384 பேர் தப்பியோடியது தெரிய வந்துள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். மாவட்ட எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதுÕÕ என்றார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல முயன்ற முன்னாள் விமானப் படை வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பன்னு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த வீரர் உள்பட பல முக்கிய தீவிரவாதிகளும் தப்பியுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment