Sunday, April 15, 2012

இலங்கைத் தமிழர்களது உண்மைநிலையை உணர தமிழகக் கட்சிகளும் தங்களது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 15, 2012
இலங்கை::இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் ஆறுநாட்கள் கொண்;ட விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவிருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். இந்த விஜயமானது எமது மக்களினதும் எமது தாயகப் பகுதிகளினதும் இன்றைய யதார்த்த நிலையை உணர்ந்து கொள்வதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவினரை மனதார வரவேற்கும் எதிர்பார்ப்பில் எமது மக்கள் காத்திருக்கின்ற நிலையில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் பிரதிநிதிகள் எவரும் இந்த தூதுக்குழுவில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்கிற செய்தி எமது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இந்த முடிவானது வரவிருக்கும் இந்திய தூதுக்குழுவினுள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவதாக எமது மக்கள் உணர்கிறார்கள்.

கடந்தகால அழிவுகளில் இருந்து எமது மக்கள் இப்போது சுதந்திரமானதொரு நிலையில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழலுக்குள் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அழிந்து போன எமது தாயகப் பிரதேசங்கள் அபிவிருத்தியால் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்;தியாவின் உதவியினால் மீளக்குடியேறிய மக்களுக்கு 50 000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை சீர்செய்யும் திட்டம் முற்றாக அழிந்து போயுள்ள வடமாகாண புகையிரதப் பாதையை தென்பகுதியுடன் இணைக்கும் திட்டம் யாழ்.அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் கைப்பணித் துறையினை மேம்படுத்தும் திட்டம் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையத்தினை அமைக்கும் திட்;டம் பனை அபிவிருத்தி ஆராய்ச்சி மையத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 79 பாடசாலைகளை புனரமைக்கும் திட்டம், திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்பு வடகடல் நிறுவன அபிவிருத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் திட்டம் விவசாய மக்களுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கும் திட்டம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை புனரமைக்கும் திட்;டம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் ஒரு சில திட்டங்கள் முன்னெடுக்கப்படக் கூடிய நிலையிலும் இருக்கின்றன. மேலும் இன்னும் எமது மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் ஏராளம் உள்ளன.

இவற்றையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் கண்கூடாக கண்டு உணர வேண்டும் அவர்களது வருகை எமது மக்களின் வாழ்வியல் மேம்பாட்டினை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பமாகும்.

எனவே இலங்கை வருகின்ற இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் எமது நாட்டில் எவற்றை எல்லாம் பார்வையிட வேண்டும் என விரும்புகின்றார்களோ எந்த மக்களை சந்திக்க வேண்டும் என விரும்புகின்றார்களோ அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுப்பது தமிழ் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதிநிதி என்ற வகையில் எனது பொறுப்பாகும் என்பதை இங்;கு நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆகவே அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் பிரதிநிதிகளை இலங்கை வருகின்ற தூதுக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற எமது மக்களின் விருப்பத்தை எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கைத் தமிழ் மக்களது உண்மை நிலையை தமிழகத்திலுள்ள எமது உறவுகள் அறிந்து கொள்வதற்கு உரிய வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன்.

நன்றி

இப்படிக்கு

டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம் ஈ.பி.டி.பி.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்
சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

No comments:

Post a Comment