Friday, April 27, 2012

நைஜீரியாவில் நாளிதழ் அலுவலகங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல்- 40 பேர் பலி!

Friday, April, 27, 2012
அபுஜா::நைஜீரியாவில் திஸ் டே என்ற முன்னணி நாளிதழ் அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தலைநகர் அபுஜாவின் வட மத்திய பகுதியிலும் கடுனா மாகாணத்திலும் உள்ள திஸ் டே நாளிதழின் அலுவலகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. அபுஜாவில் உள்ள அலுவலகத்தில் நேற்று முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் கடுனா மாகாணத்தில் அடுத்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

திஸ் டே அலுவலகங்கள் மீதான தாக்குதல்களில் சம்பவ இடங்களிலேயே 37 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

வெடிகுண்டுகளை நிரப்பிய காரை நாளிதழ் அலுவலகங்கள் மீது மோதச் செய்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடுனாவில் திஸ் டே அலுவலகம் மீதான தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் தி சன்', தி மொமன்ட் போன்ற பல நாளிதழ்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போஹோ கராம் என்ற அமைப்புதான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஊடக அலுவலகங்கள் மீதான தற்கொலைப் படைத் தாக்குதலானது நைஜீரியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

No comments:

Post a Comment