Monday, April 2, 2012

கே.என்.நேருவுக்கு மிரட்டல்- 3 பேரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை!

Monday, April 02, 2012
திருநெல்வேலி::ராமஜெயம் கொலையைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவைக் கொலைசெய்யப் போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது தொடர்பாக நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நேருவின் தம்பி ராமஜெயம் சமீபத்தில் திருச்சி அருகே கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேருவின் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நேருவைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து விட்டு, அடுத்த குறி நேருதான் என்றுகூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து நேரு தரப்பில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் இந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் கந்தசாமி, சங்கரன்கோவில் என்ற பெயரில் தொலைபேசி எண் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சங்கரன்கோவில் விரைந்தனர். கந்தசாமியைப் பிடித்து விசாரித்தபோது, தொலைபேசி எண்ணை வாங்கியவர் அவர் இல்லை, சண்முகவேல் என்று தெரிந்தது. இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்தநல்லூரைச் சேர்ந்தவர். இவர்தான் கந்தசாமி பெயரில் செல்போன் எண்ணை வாங்கியிருந்தார்.

இதையடுத்து கந்தசாமியை போலீஸார் விட்டு விட்டனர். சண்முகவேலை போலீஸார் பிடித்தனர். மேலும், அவரது நண்பர்களான களக்காட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோரையும் பிடித்த போலீஸார் விசாரணைக்காக அத்தனை பேரையும் திருச்சி கொண்டு சென்றனர்.

இவர்களுக்கும் மிரட்டலுக்கும் என்ன தொடர்பு, கூலிப்படையினராக செயல்பட்டனரா, கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment