Friday, March 2, 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வும்-ஆனந்தசாங்கரி!

Friday, March 02, 2012
இலங்கை::மேற்படி ஆணைக்குழுவின் 19வது அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எனக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணத்தினால், நான் அமைதியாக இருக்கவிரும்பியபோதும், த.தே.கூட்டமைப்பு இந்த அமர்வில் கலந்துகொள்ளமாட்டாது என அறிந்ததும் இன்று மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் அதிருப்தியையும், அமைதியின்மையையும் குறைக்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகின்றேன்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வழக்கம் எனக்கில்லை. அரசியல்வாதிகளாகிய எங்களுடைய கடமை மக்களுக்கு உண்மையாக இருப்பதும் உண்மையைக்கூறி மக்களை எம்பக்கம் அழைத்துச் செல்வதுமே. நாம் கூட்டாக செயற்படும்போது எம்மில் ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவின்றிச் செயற்படவேண்டும். தலைமையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஏனைய அங்கத்தவர்களை நோகடிக்கவோ, பாதிக்கவோகூடாது. அவர்கள்தான் மக்களுடன் அதிகமாக பழகுகின்றவர்கள். அவர்களுக்கு மக்களின் முன்நின்று பதில்கூறவேண்டிய கடமையும் பொறுப்பும் உண்டு. நானும் புளொட் அமைப்பின் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் நாமாகவே சேர்ந்தவர்களாக இருப்பினும், மேற்படி த.தே.கூட்டமைப்பின் தீர்மானத்திற்கும் எமக்கும் சம்மந்தம் இல்லை. இதனையே த.தே.கூட்டமைப்பின் அநேக உறுப்பினர்களும் கூறுகின்றனர்.

இந்தப் போராட்டம் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்கின்றது. நீண்டகால அரசியல் அனுபவமுள்ள என்னுடனும், திரு.சித்தார்த்தனுடனும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை ஒரு முடிவை எடுத்திருக்கலாம். இந்த முடிவை அவசர அவசரமாக எடுத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த அமர்வு பல நாட்களுக்கு நீடிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல் தமிழ் மக்களை கடுமையாக பாதிக்கின்ற அமர்வுகள் எதுவாக இருந்தாலும் சரி, தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை உள்ளது என்பது உண்மையானால் இந்த முடிவை மிகக் கவனமாகப் பரிசீலித்து அவசியமேற்படின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எல்லைக்கு அப்பால் சென்று பரிசீலனை செய்திருக்க வேண்டும்.

இந்த இரு அறிக்கைகள் சம்பந்தமாக தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்திவிட்டதாகவும், அதே நிலைப்பாட்டை தற்போதும் கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது சரியெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அமர்வில் கலந்து கொள்ளும் என்று, தம் சொத்துக்களையும், உறவுகளையும் இழந்து உண்ணும் உணவிற்கே கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஏன் கூறினார்கள்? என்ற கேள்வி எழுகின்றது. அந்த இரண்டு அறிக்கைகளையும் மறந்துவிடுவோம். இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவ மயப்படுத்தலை அகற்றுதல், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல், நியாயமற்றமுறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள், முதியோர், பிள்ளைகளுடன் சிறையில் இருக்கும் தாய்மார்கள், இராணுவத்தின் அத்துமீறிய தலையீடுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசப்போகின்றோம் என அரசுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்தியிருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது மக்களுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரால் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஓர் ஆங்கில தேசிய பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்தும் வாழும் பலரின் உள்ளத்தை நோகடித்தும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அறிக்கையில் 'இலங்கையில் உள்ள எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் நாட்டுப் பிரிவினைப்பற்றி கடுகளவும் அக்கறை கொள்ளவில்லை' என்றுள்ளது இவ்வறிக்கை நல்லெண்ணத்தோடு விடப்பட்டிருந்தாலும் முற்று முழுதாக உண்மைக்குப் புறம்பானதாகும். மேலும் இவ்வறிக்கையில் கீழ்க்கண்டவாறுள்ளது. 'அது ஒரு புறமிருக்க அத்தகைய விவாதம் விரக்தியடைந்த இளைஞர்களும், வேலைவாய்ப்பற்று கோபமாக இருந்தவர்களுமே வடக்கிலும் சரி, கிழக்கிலும்சரி, தெற்கிலும் சரி அரசுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டனர்' அறிக்கையின் இப்பகுதி தெரிந்தோ தெரியாமலோ தம் வாழ்வை சிதறடித்த இளைஞர், யுவதிகளின் உள்ளத்தை புண்படுத்தியுள்ளது. தம் உத்தியோகத்தை விட்டும், பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் துறை போன்றவற்றையும் வெளிநாட்டு புலமைப்பரிசில்களை துறந்து தம்மால் தெரிவு செய்யப்பட்ட நோக்கோடு, அந்த நோக்கை அடைவதற்கு போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள்.

அவர்களின் முடிவு சரியானதாக? தவறானதா என்பது விவாததற்குரிய விடயமல்ல ஆனால் அவர்கள் நிச்சயமாக விரக்தியடைந்த இளைஞர்கள் அல்ல. அத்தேர்டு வேலைவாய்ப்பற்று கோபத்துடன் இருந்தவர்களுமல்ல அவர்களின் தீர்மானம் சரியோ? பிழையோ? என்பது வேறு விடயம். மனதை பாதிக்கும் இத்தகைய அறிக்கை பல்லாயிரக்கணக்கான பல் துறையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கக்கூடிய இளைஞர்களின் வரலாற்றை அறித்திருக்கக்கூடிய ஒருவரிடமிருந்து வரமுடியாது ஆனால் அந்த இளைஞர்களில் இன்று அனேகர் வேலையற்றுத்தான் இருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரிய வியடமாகும்.

எனவே இவ்வாறான அரசியல் அனுபவமற்றவர்களின் ஆலோசனைகளை தவிர்த்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அரசியலில் முதிர்ந்த அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உட்பூசலை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு சம்பந்தப்பட்டவர்களை இக்குறையைத் தீரத்து வைக்குமாறு வேண்டுகின்றேன்.

தொடர்ந்து நடைபெறும் பல்வேறு அனர்த்தங்கள், மனித உரிமை மீறல்கள் வேறும் பல விடயங்கள் பிரஸ்தாபிக்கும் வாய்ப்பை இளந்து விட்டோம் என்பது எனது ஒரே கவலையாகும் நம்மத்தியில் உள்ள பல்வேறு அபிப்பிராயங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களின் அரசியல் நலனை மையமாகக்கொண்டு ஓர் வலுவான கூட்டமைப்பை உருவாக்கி நம்மக்களுக்கு கூட்டமைப்பில் இருக்கும் நம்பிக்கைக்கு வலுச்சேர்ப்போம்.

'நன்றி'

அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

No comments:

Post a Comment