Friday, March 2, 2012

உதயகுமார் மீது நடவடிக்கை கோரிமேலும் ஒரு வழக்கு:சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்!:-உதயகுமார் கைது எப்போது?ஐ.ஜி.,யிடம் வழக்கறிஞர்கள் மனு!

Friday, March 02, 2012
மதுரை::கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமார் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தாக்கலான மேலும் ஒரு வழக்கை, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தினமும் 8 முதல் 10 மணி நேர மின் தடை ஏற்படுகிறது. பல காற்றாலை, அனல் மின் நிலையங்கள் இருந்தாலும் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு, பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறது. இதனால், மின் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதை சமாளிக்க, கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரைவில் துவக்க வேண்டும். இதை துவக்க விடாமல் போராட்டக்காரர்கள் தடுக்கின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். போராட்டக்காரர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை.
உதயகுமார் தலைமையிலான அணு உலை எதிர்ப்பு குழுவினர், தினமும் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்; தேசத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர். உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை இல்லை. உதயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனு நேற்று, நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ரவிச்சந்திரபாபு கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் முகமது மைதீன், ""ஏற்கனவே இது போன்ற வழக்குகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதுபோல் இவ்வழக்கையும் சென்னைக்கு மாற்ற வேண்டும்,'' என்றார். சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உதயகுமார் கைது எப்போது?ஐ.ஜி.,யிடம் வழக்கறிஞர்கள் மனு!

மதுரை:""கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உதயகுமார் மீது, இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸிடம் மதுரை வழக்கறிஞர்கள் மீண்டும் மனு அளித்தனர்.

மதுரையில், அணுமின் நிலைய ஆதரவு வழக்கறிஞர்கள் 25 பேர், நேற்று பூசைத்துரை தலைமையில் ஐ.ஜி.,யிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்கனவே பிப்.,13ல் மனு அளித்தோம். அவர் மீது, 190 வழக்குகள் உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், அன்னிய நாட்டினர் நம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, நாட்டைத் துண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

உதயகுமாரோ, பிரதமரை அவதூறாகப் பேசியதோடு, நிதி வந்தது உண்மை என்றால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.இந் நிலையில், அன்னிய பணத்தைப் பெற்றதாக, தூத்துக்குடியில் மூன்று தொண்டு நிறுவனங்கள், நெல்லையில் இரு தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய ஐ.ஜி.,யால் முடியும். அதற்கு அதிகாரம் உண்டு. எனவே, பிப்.,13ல் கொடுத்த புகாருக்கும், தற்போது கொடுத்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment