Thursday, March 22, 2012ஐக்கிய நாடுகள் : தங்கள் அணுசக்தி திட்டங்கள் மக்கள் மேம்பாட்டுக்கானவை என்பதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி, யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஈரான் செயல்படுத்தி வருகிறது. இதற்காக அந்த நாடு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஐநா தீர்மானத்தின் மீதான விவாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. அதில் பங்கேற்ற, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மக்கள் மேம்பாட்டுக்கானவை, அமைதியான பயன்பாட்டுக்குதான் என்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெறும் வகையில், சர்வதேச அணுசக்தி அமைப்புடன் முழுமையாக ஈரான் ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச ஒப்பந்தங்கள் அடிப்படையில், அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் உரிமையை இந்தியா எப்போதுமே ஆதரிக்கிறது.
ஈரானின் அணுசக்தி தொடர்பான பிரச்னைகள் அமைதியான முறையில் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஈரான் அணுசக்தி பிரச்னைகள் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்துவதை இந்தியா ஆதரிக்கிறது. அப்படி செயல்படுத்தும் போது சட்டப்பூர்வமான வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஹர்தீப் சிங் பேசினார்.
No comments:
Post a Comment