Thursday, March 22, 2012

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு!

Thursday, March 22, 2012
சென்னை::திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்லூரிகளில் விஜிலன்ஸ் போலீசார் இன்று காலை முதல் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை உள்பட 8 இடங்களில் சோதனை நடக்கிறது.கடந்த திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இப்போது திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
எ.வ.வேலு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரிடம் முன்விசாரணை நடந்தது. விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.26 லட்சத்து 30 ஆயிரத்து 787க்கு சொத்து சேர்த்து தெரியவந்தது. இதையடுத்து எ.வ.வேலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை லஞ்ச ஒழிப்புதுறை ஐஜி குணசீலன், டிஐஜி வெங்கட்ராமன், எஸ்.பி. செந்தில் வேலன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் விஜிலன்ஸ் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம், சேலம் டிஎஸ்பி சந்திரமவுலி உள்பட 12 டிஎஸ்பிக்கள் தலைமையிலான போலீசார் இன்று காலை திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் 12 குழுக்களாக பிரிந்து எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் சோதனையை தொடங்கினர். டிஎஸ்பிக்களை தவிர இந்த குழுவில் மொத்தம் 45 பேர் இடம் பெற்றுள்ளனர். கல்வி நிறுவனங்களில் உள்ள பதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை சோதனை செய்து வருகின்றனர்.

அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் எ.வ.வேலுவின் வீடு உள்ளது. அங்கு அவரது மனைவி வசிக்கிறார். மற்ற கல்லூரி வளாகங்களில் அவரது மகன்கள் தனித்தனியாக வசிக்கின்றனர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடக்கிறது. எ.வ.வேலுவின் மனைவி மற்றும் அவர்களது மகன் எ.வ.குமரன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடந்ததாக தெரிகிறது. எ.வ.வேலு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். அங்கும் சோதனை நடந்து வருகிறது.மேலும் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் கிராமத்தில் உள்ள வீடு, திருவண்ணாமலை பாவாஜி நகரில் உள்ள வீடு உள்பட மொத்தம் 8 இடங்களில் சோதனை நடக்கிறது. சோதனை நடக்கும் பகுதி அருகே செல்ல பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. சோதனை நடந்தபோதும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கின. மாணவ, மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment