Friday, March 23, 2012சென்னை::இலங்கையின் உள்நாட்டு இறைமையில் தலையிடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நீதியும், சுயமரியாதையும் கிடைக்க வேண்டும் என்பது தொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா சமர்ப்பித்த யோசனைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் நலன் கருதி, இந்தியா இதற்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜெனீவா பிரேரணையை ஆதரவளித்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், இந்த தீர்மானத்தினால் இந்திய - இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமி, இந்திய இலங்கை உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிட்டார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், எந்த நாட்டிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை, இந்தியா அனுமதிக்காது என்று தெரிவித்திருந்தார்.
இதனை மேற்கோள்காட்டிய வீ.நாராயணசாமி, தமது நிலைபாடு தொடர்பில் இலங்கைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தியா நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் இந்திய அரசியல் தரப்புக்களில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி இது தொடர்பில் தெரிவிக்கும் போது, இந்தியா அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இந்த தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்தியா பிழையான விடயம் தொடர்பில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டதாக, இந்திய ராஜதந்திரி கே.சீ.சிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளித்தமை தொடர்பில், இலங்கை இந்தியாவிடம் வருத்தம் வெளியிட்டிருப்பதாக, சி.என்.என். ஐ.பி.எம் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த தீர்மானத்தை தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வரவேற்றுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கனிமொழி கருத்து தெரிவிக்கும் போது, இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்ததன் மூலம், தமிழர்களுக்கு நீதியும், உரிமைகளும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை முக்கியமானது என குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவின் இந்த தீர்மானத்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வரவேற்பு வெளியிட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் நலன் பொருட்டு மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என கோரியுள்ளார்.
No comments:
Post a Comment